'மாறி மாறி அன்பை பொழியுங்கள்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ராமதாஸ் பேச்சு | ramadoss Christmas Celebration in salem

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (25/12/2017)

கடைசி தொடர்பு:11:05 (25/12/2017)

'மாறி மாறி அன்பை பொழியுங்கள்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ராமதாஸ் பேச்சு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சேலம் ஏ.வி.ஆர்., டவர் அருகே உள்ள சிவராஜ் ஹாலிடே ஹோட்டலில் சேலம் மறை மாவட்ட பேராயர் சிங்கராயன் மற்றும் சில போதகர்களோடு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினார்.

இதைப்பற்றி பேராயர் சிங்கராயர், ''ஏசு நல்லவர். பல நன்மைகளைச் செய்தவர்.அதனால்தான் உலகம் முழுவதும் ஏசு பிறந்த தினமான கிறிஸ்துமஸை மக்கள் கொண்டாடுகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸும், அக்கட்சியின் தொண்டர்களும் இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஏசு அனைத்து நன்மைகளையும் செய்வார்'' என்றார்.

அடுத்து பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், '' பேராயர் சொன்னதை போல ஏசு பிரான் பிறந்த தினத்தை உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடுகிறார்கள். ஓர் அரசியல் கட்சி இந்த விழாவை முன்னெடுத்திருப்பது முதன் முதலில் பாட்டாளி மக்கள் கட்சிதான். அதையடுத்து மற்ற கட்சிகளும் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுகிறார்கள்.

இந்த விழா வேறு காரணத்திற்காக செய்யவில்லை. ஏசு பிரான் போதித்த கருத்துகள் உலக மக்களுக்கு நன்மை செய்துள்ளன. அதனால் இவ்விழாவை கொண்டாடுகிறோம். இவ்விழாவிற்கு பேராயர் சிங்கராயரும், மற்ற போதகர்களும் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு சிறப்புச் சேர்க்கப்பட்டிருக்கிறது. மக்கள் திருக்குறள், பைபிள், குரான் படிக்க வேண்டும். அதில் நல்ல கருத்துகள் இருக்கின்றன.
ஏசு பிரான் மலை பிரசங்கத்தில் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றார். ஆனால் இன்றைய இளைஞர்கள் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவார்களா? பாவிகளை ரட்சித்தவர். ஏசு பிரானின் போதனைகளைப் பின்பற்றினால் உலகத்தில் அமைதி நிலவும். அன்பை போதித்தவர் ஏசு பிரான். அதனால் அனைவரும் மாறி மாறி அன்பை பொழிந்து கொள்ளுங்கள்'' என்றார்.