'பால் குளிரூட்டும் நிலையத்தில் முறைகேடு' - சிவகங்கை எஸ்.புதூரில் ஆர்ப்பாட்டம்! | Protest against Milk storage point in sivaganga

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (25/12/2017)

கடைசி தொடர்பு:12:10 (25/12/2017)

'பால் குளிரூட்டும் நிலையத்தில் முறைகேடு' - சிவகங்கை எஸ்.புதூரில் ஆர்ப்பாட்டம்!

பால் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் வலசைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பால் குளிரூட்டும் நிலையம். இம்மையத்தில் பால் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதைக் கண்டித்து தமிழ்நாடு பால்உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக எஸ்.புதூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வலசைப்பட்டியில் ஆவின் குளிரூட்டும் மையத்தில் 5000 லிட்டர் சேமித்துவைக்கமுடியும். 4500 லிட்டர் கொள்முதல் செய்கிறார்கள். இந்தப் பாலில் தண்ணீர் கலக்கிறார்கள். பால் தரம் குறைவு என விலையைக் குறைத்து மோசடி செய்கிறார்கள். தரமான பால் என்றால் ஒரு லிட்டர் ரூபாய் 28-29 கொடுக்க வேண்டும். 

ஆனால் பால் தரத்தை பொய்யாக பதிவிடுகிறார்கள். சில நாள்கள் காலையில் கொள்முதல் செய்த பால் தரமில்லையென்று மாலையில் திருப்பிக் கொடுக்கிறார்கள். மாலையில் திரும்ப கொடுக்கிற பால் பயனற்றுப் போகிறது. இச்செயல் முறைகேட்டுக்குக் காரணமான ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காந்திமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை விளக்கி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சங்கர், மாவட்டச் செயலாளர் மோகன், சிஐடியு பொறுப்பாளர்கள் சிங்காரம், சேதுராமன், ஆகியோர் பேசினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க