கன்னியாகுமரியில் இன்னும் 243 மீனவர்களைக் காணவில்லை! | 243 fishermen still missing in Kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (25/12/2017)

கடைசி தொடர்பு:16:15 (25/12/2017)

கன்னியாகுமரியில் இன்னும் 243 மீனவர்களைக் காணவில்லை!

கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி வீசிய ஒகி புயலில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் காணாமல் போனார்கள். அவர்களை கப்பல், விமானம் கொண்டு தேடிய போதிலும் முழுவதுமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீனவர்களின் 89 விசைப்படகுகளைக் கொண்டு தேடும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் படகுகளும் கரைக்குத் திரும்பிவிட்டன. இந்த நிலையில் இன்னும் 243 மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 176 மீனவர்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 41 மீனவர்களும்,வெளிமாநிலங்களைச் சேர்ந்த 26 மீனவர்களும் கண்டுபிடிக்கபடவில்லை. அதுபோல அவர்கள் சென்ற 13 நாட்டுப் படகுகள் மற்றும் 20 விசைப்படகுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை 8 மீனவர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பில் 317 மீனவர்கள் கடலில் மாயமாகி உள்ளனர். அதில் 74 பேர் இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளன. உடல்களின் டிஎன்ஏ மாதிரி சோதனை திருவனந்தபுரம் ராஜூவ்காந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் பயோ டெக்னாலஜி மூலம் நடத்தப்படுகிறது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு, விவரங்கள் சரியாகப் பொருந்தும் பட்சத்தில் உடல்கள் ஒப்படைக்கப்பட இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க