வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (25/12/2017)

கடைசி தொடர்பு:14:10 (25/12/2017)

``ஜூனியர் அமைச்சர்களால் வெற்றியை இழந்தோம்": குமுறும் ராமநாதபுரம் அ.தி.மு.க-வினர்!

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர்

தினகரனின் வெற்றிக்கும் மதுசூதனின் தோல்விக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த பல ஜூனியர் அமைச்சர்கள் காரணமாக இருந்ததாக  ஆர்.கே.நகர் தேர்தல் பணிக்குச் சென்று திரும்பிய அ.தி.மு.க-வினர் குமுறுகின்றனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஆட்சி, அதிகாரம், கட்சி, சின்னம் என அனைத்தும் துணைக்கு இருந்தும் 15 நாள்கள்கூட பிரபலமடையாத குக்கர் சின்னத்திடம் 'வெற்றிச் சின்னம்' இரட்டை இலை தோற்றுப்போனது. டி.டி.வி.தினகரனிடம் மதுசூதனன் நின்று தோற்றதைக்கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாத அ.தி.மு.க தொண்டர்கள் இரட்டை இலை தோல்வியின் சின்னமாக மாறிவிட்டதே என்ற ஆதங்கத்திலும் அதிர்ச்சியிலும் இருந்து மீள முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில், மதுசூதனுக்கு ஆதரவாக ராமநாதபுரம் பகுதியிலிருந்து தேர்தல் பணியாற்ற சென்றிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''இழந்த சின்னத்தைப் பெற்ற பின்னரே தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் எங்கள் கட்சி தலைமை உறுதியாக இருந்தது. அதன் காரணமாகவே முடக்கப்பட்ட சின்னம் எங்களுக்கு கிடைக்கும் வரை இடைத்தேர்தலை நடத்தவிடாமல் நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு இரட்டை இலைச் சின்னமானது அசைக்க முடியாத சின்னமாக வலம் வந்தது. சின்னம் எங்களுக்குக் கிடைத்தவுடன் மகிழ்ச்சியுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டோம். ஆனால், எங்களுக்கு வழிகாட்ட வேண்டிய அமைச்சர்களோ இரட்டை இலைச் சின்னம் வெற்றியைப் பெற்றுத் தந்துவிடும் என்ற மமதையில் ஆர்.கே.நகர் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்காமல் அதிகார தோரணையுடன் இருந்துகொண்டனர். 

அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஜூனியர் அமைச்சர்கள் பெயரளவுக்கே தேர்தல் பணிகளில் ஈடுபாடு காட்டினர். இவர்களுக்கு குறைந்த அளவாக ஒதுக்கப்பட்ட 2 வாக்கு சாவடிகளைச் சேர்ந்த வாக்களர்களான 3 ஆயிரம் பேரில் 60 சதவிகித வாக்காளர்களைக்கூட இவர்கள் சந்திக்கவில்லை. மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையும் முழுதாக சென்றடையவில்லை. ஒரு வீட்டில் கணவன் மனைவி என இரு ஓட்டு இருந்தால் அதில் ஒரு ஓட்டுக்கு மட்டுமே பணம் கொடுக்கப்பட்டது. மற்றொரு ஓட்டுக்கு பணம் கேட்டால் 'இன்றைக்கு வா. நாளைக்கு வா' என அவர்களை அலையவிடுவது போன்ற செயல்களில் பகுதி பொருப்பாளராக இருந்த அமைச்சர்கள் சிலரே ஈடுபட்டனர். 

தினகரன் தரப்பினர் தினமும் தங்களுடன் பிரசாரத்துக்கு வரும் ஆர்.கே.நகர் வாசிகளுக்கு சம்பளம் கொடுத்துக் கவனித்தனர். ஆனால், எங்கள் ஆட்களோ அவர்களுக்கு கொடுக்க வேண்டியதிலும் கைவைத்தனர். இதனால் பணம் கிடைக்காத பலர் எங்களுக்கு எதிராகவும் தினகரனுக்கு ஆதரவாகவும் வாக்கு சாவடி முன் நின்றவாறு செயல்பட்டனர். மதுசூதனன் இரட்டை விளக்கு சின்னத்தில் நின்ற போதுகூட உண்மையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் வேலை பார்த்த பலர் இரட்டை இலைக்கு ஆர்வமாகப் பணியாற்றவில்லை. ஒட்டு மொத்தமாகத் தினகரனின் ஸ்லீப்பர் செல்லாகப் பணியாற்றிய தென்மாவட்டத்தைச் சேர்ந்த சில ஜூனியர் அமைச்சர்களின் நடவடிக்கைகள்தான் இந்தத் தோல்விக்குக் காரணம்'' என்றனர்.