``யதார்த்தத்தை தி.மு.க உணர வேண்டும்..!'' ஸ்டாலினுக்கு வீரமணி சொல்லும் அட்வைஸ்

''அடிமட்டத்தில் ஒவ்வொரு தொகுதி நிலவரத்தையும் ஆழமாகப் பரிசீலித்து, யதார்த்தத்தை உணர வேண்டிய கடமையும் திட்டமிட்டு செயலாற்றும் பொறுப்பும் தி.மு.க-வை வருங்காலத்தில் நிச்சயம் பலப்படுத்தும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

வீரமணி

இதுகுறித்து அவர், இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இரட்டை இலை என்றால் ஏதோ வெற்றிச் சின்னம் என்ற மாயை, அக்கட்சியின் விலக்கப்பட்ட உறுப்பினரின் வெற்றியின்மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டியது, அத்தொகுதி மக்கள் ஆளுங்கட்சிக்குத் தங்கள் கோபத்தை, வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதை யாரும் மூடி மறைத்துவிட முடியாது. மாநில உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்து மண்டியிட்டு, டெல்லி சரணம் பாடும் ஆளும் அ.தி.மு.க அரசு மீதும் - அவ்வரசையும் அக்கட்சியையும் பொம்மலாட்டத்து பொம்மைகளாக்கிடும் மத்திய பா.ஜ.க, மோடி மீதும் தங்கள் தீராக் கோபத்தைக் காட்டியுள்ளனர்.

பணத்துக்காக மட்டுமே ஓட்டு என்றால், அதிகம் வாரி இறைத்ததாகச் சொல்லப்பட்ட ஆளும் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்க வேண்டும். முடிவு அப்படி அமையவில்லை என்பதால், தமிழகத்தில் அவர்களது ஆட்சித் தொடர இனியும் எவ்வித தார்மிக உரிமையும் ஜனநாயக உரிமைப்படி கிடையாது. இது வெறும் அ.தி.மு.க உட்கட்சிப் பிரச்னையல்ல. ஏற்கெனவே, தற்போதுள்ள மாநில அரசு, பெரும்பான்மையை இழந்துள்ளதோடு, மக்களின் ஆதரவையும் இழந்த ஒன்றாகும். தமிழகத்தில் பா.ஜ.க விலை போகாத சரக்கு என்பதால், பெரியார் பிறந்த மண்ணில் காலூன்றும் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நோட்டாவைவிடக் குறைந்த வாக்குகளையே பெற்று தேசியப் பெருமையைச் சுமந்து பவனி வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி, ஏற்கெனவே அ.தி.மு.க வெற்றி பெற்ற தொகுதி. தி.மு.க வெற்றி பெற்ற தொகுதி அல்ல. எனவே, அதற்குப் புதிய இழப்பு ஏதும் ஏற்படவில்லை. முன்பு பெற்ற வாக்கு விகிதத்தையே அது பெற்றிருக்கிறது. கொள்கையை முன்னிறுத்தி, பண விநியோகம் செய்யாமல் தேர்தலைச் சந்தித்து தோல்வியுற்றாலும் அந்தத் தோல்வி, மரியாதையை இழக்கும் தோல்வியாகாது என்ற தி.மு.க-வின் நிலைப்பாட்டை ஜனநாயகவாதிகள் வரவேற்கவே செய்வர் என்றாலும், அடிமட்டத்தில் ஒவ்வொரு தொகுதி நிலவரத்தையும் ஆழமாகப் பரிசீலித்து, யதார்த்தத்தை உணர வேண்டிய கடமையும் திட்டமிட்டு செயலாற்றும் பொறுப்பும் தி.மு.க-வை வருங்காலத்தில் நிச்சயம் பலப்படுத்தும்'' என்று கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!