வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (25/12/2017)

கடைசி தொடர்பு:15:09 (25/12/2017)

``துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை”: அ.தி.மு.க கூட்டத்தில் முடிவு!

``துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அ.தி.மு.க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க கூட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், இன்று அ.தி.மு.க கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு தோல்வி ஏற்படவில்லை. மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து வெற்றி பெற்றுள்ளனர். இது உண்மையான வெற்றியல்ல. ஆட்சி, அதிகாரங்களை வைத்து இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்திக்கவில்லை. டி.டி.வி-யும் ஸ்டாலினும் கூட்டுசேர்ந்து இரட்டை இலையைத் தோற்கடிக்க நினைத்துள்ளனர். அ.தி.மு.க-வுக்குத் துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

இதையடுத்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே அரசியலுக்கு வந்தவன் நான். ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம். எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் தரப்புக்குச் செல்லவில்லை. எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள். நல்ல நோக்கத்துக்காக இணைந்த அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் ஏதும் இல்லை” எனக் கூறினார்.