' அண்ணே...நான் எப்பவும் உங்க ஆதரவாளர்தான்!'  - தினகரனிடம் பேசிய 4 அமைச்சர்கள்  | ' We are always your supporters!' - admk ministers who spoke to Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (25/12/2017)

கடைசி தொடர்பு:15:38 (25/12/2017)

' அண்ணே...நான் எப்பவும் உங்க ஆதரவாளர்தான்!'  - தினகரனிடம் பேசிய 4 அமைச்சர்கள் 

தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி, ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. " வெற்றித் தகவல்கள் வந்து கொண்டிருந்த நேரத்திலேயே நான்கு அமைச்சர்கள் தினகரன் தரப்பைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன். இரட்டை இலை, உதயசூரியன் ஆகியவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, குக்கர் சத்தத்தை பெரும் இரைச்சலோடு முழங்கவிட்டுள்ளனர் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள். வாக்கு எண்ணிக்கையின் 19 சுற்றிலும் தினகரனே முன்னிலை பெற்றதை, அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுகுறித்து இன்று காலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விவாதித்தனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும்.

தேர்தல் தோல்வி குறித்துப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்குத் தோல்வி ஏற்படவில்லை. மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து வெற்றி பெற்றுள்ளனர். இது உண்மையான வெற்றியல்ல. ஆட்சி, அதிகாரங்களை வைத்து இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்திக்கவில்லை. டி.டி.வியும் ஸ்டாலினும் கூட்டுச்சேர்ந்து இரட்டை இலையைத் தோற்கடிக்க நினைத்துள்ளனர். அ.தி.மு.கவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதையடுத்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “ தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே அரசியலுக்கு வந்தவன் நான். ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம். எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் தரப்புக்குச் செல்லவில்லை. எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள். நல்ல நோக்கத்துக்காக இணைந்த அ.தி.மு.கவில் உட்கட்சி பூசல் ஏதும் இல்லை" என்றார். ஆனால், அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பாஸ்கரன், கே.சி.வீரமணி உள்ளிட்ட சிலர் பங்கேற்கவில்லை. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், " ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லும் முடிவில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன். முதலில் ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமும் அதனைத் தொடர்ந்து மண்டல வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மண்டலம் என்ற அடிப்படையில் பத்து மண்டலங்களிலும் இந்தக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தப் பயணத்தின்போது பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தப் பயணத்தின்போது எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் பலரும் வர இருக்கின்றனர்.

நேற்று ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, நான்கு அமைச்சர்கள் காசிநாதபாரதிதினகரன் தரப்பைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது பேசிய அவர்கள், ' அண்ணே...நாங்க எப்பவும் உங்களோடுதான் இருப்போம். சூழ்நிலை காரணமாகத்தான் பல விஷயங்களை சகித்துக் கொண்டு இங்கு இருக்கிறோம். சின்னம்மா தயவில்தான் இந்தப் பதவிகளைப் பெற்றோம். உங்கள் குடும்பத்துக்கு எப்போதும் விசுவாசமாக இருப்போம். நேரம் வரும்போது உங்கள் பின்னால் வருகிறோம்' எனக் கூறியுள்ளனர். அவர்களில் சிலர் இன்று தலைமைக் கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளனர். மண்டல வாரியாக நடக்கப் போகும் சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமியே மிரளும் அளவுக்கு எங்கள் பின்னால் நிர்வாகிகள் வர இருக்கிறார்கள்" என்றார் விரிவாக. 

தினகரன் ஆதரவாளரான வழக்கறிஞர் காசிநாத பாரதியிடம் பேசினோம். " தேர்தல் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக வரும் என்பதில் உறுதியாக இருந்தோம். தேர்தல் பிரசாரத்தில் ஆளும்கட்சி தரப்புக்கு அதிருப்தியே மிஞ்சியது. ஆர்.கே.நகரில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலோனோர் வெற்றிவேலின் ஆதரவாளர்கள். அவர்கள் அனைவரும் தினகரனின் வெற்றிக்காகப் பாடுபட்டனர். பா.ஜ.க அரசின் பழிவாங்கும் போக்கை வீதிகள்தோறும் கொண்டு சென்றோம். இதனால்தான் சிறுபான்மை மக்களின் வாக்குகளும் அபரிமிதமாகக் கிடைத்தன. பதிவான வாக்குகளில் பெண்கள் மட்டுமே 80 ஆயிரம் வாக்குகளைச் செலுத்தினர். அப்போதே, '40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்' என உறுதியாகத் தெரிவித்தோம். இந்தத் தேர்தலில் அமைச்சர்கள் பலரும் தனித்துவிடப்பட்டனர். களநிலவரத்தை தி.மு.கவின் கீழ்மட்ட நிர்வாகிகளும் புரிந்து கொண்டு அமைதியாக இருந்துவிட்டனர். டி.டி.வியின் பிரசார முறைகளும் நிர்வாகிகளின் கடுமையான உழைப்பும்தான் இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித் தந்தது" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்