வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (25/12/2017)

கடைசி தொடர்பு:17:45 (25/12/2017)

ஜெயலலிதாவுடனான நினைவுகளைப் பகிர்ந்த கிருஷ்ணபிரியா..!

ஜெயலலிதா, அவருக்கு வளைகாப்பு செய்த புகைப்படங்களை, சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, யார் அடுத்த ஜெயலலிதாவின் வாரிசு என்ற போட்டி ஒரு வருட காலமாக அ.தி.மு.க-வில் நடைபெற்று வருகிறது. அது தமிகழத்தின் முக்கிய பிரச்னையாகவும் உருமாறியுள்ளது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டி.டி.வி.தினகரன் மாபெறும் வெற்றி பெற்றுள்ளார். அதையடுத்து, தினகரன்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில், சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா, 2005-ம் ஆண்டு ஜெயலலிதா அவருக்கு வளைகாப்பு செய்யும் படங்களை அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், 'இப்புகைப்படங்கள் , 2005-ம் ஆண்டு , அம்மா அவர்கள் போயஸ் இல்லத்தில், எனது வளைகாப்பு நடைபெற்றபோது எடுக்கப்பட்டவை. சில நினைவுகள் நம் மரணம் வரை கூடவே பயணிக்கும். அவற்றில் இதுவும் ஒன்று. எங்களின் மூன்று அன்னைகளில் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்ற உண்மையை இன்னமும் எங்களின் மனம் நம்ப மறுக்கிறது. எனக்கு வளைப்பூட்டும்போது , அம்மா அவர்கள் பாடிய “என்ன தவம் செய்தனை யசோதா“ என்று கிருஷ்ணனுக்கு யசோதை பாடிய பாடலை, கிருஷ்ணபிரியாவுக்கு, சற்றும் நான் எதிர் பார்க்காத நேரத்தில் பாடியது, இன்னமும் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் போட்டோ தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகிறது.