வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (26/12/2017)

கடைசி தொடர்பு:07:52 (26/12/2017)

நவீன கொத்தடிமைகளா பெண்கள்? - அத்துமீறும் ஸ்பின்னிங் மில்கள்!

நாட்டில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக  ஜவுளித்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பினை வழங்கி வருகின்றது. ஜவுளித்தொழில் சுமங்கலிதிட்டம், மாங்கல்யதிட்டம், திருமணதிட்டம், ஹாஸ்டல் திட்டம் மற்றும் ஒப்பந்த முறை வேலைத்திட்டங்கள் போன்ற பல்வேறு பெயர்களில் ஒப்பந்த முறைகளில் நவீன கொத்தடிமைகளாகப் பெண்கள் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், ஜவுளித்தொழிலில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பில் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில், கோவை பெண் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது இந்தப் பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் செயல் இயக்குநர் நம்பி கூறுகையில்,  "ஜவுளித்தொழிலில், முக்கியமாக ஸ்பின்னிங் மில்களில், 90 சதவிகிதம் பெண்கள்தான் பணிபுரிகின்றனர். இதில், 60 முதல் 70 சதவிகிதம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேலும், உழைப்புச்சுரண்டல்கள்  மற்றும் தொழிலாளர் நலச்சட்ட உரிமை மீறல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

குறிப்பாக பணிக்கு சேரும்போது, அந்தப் பெண்களுக்குப் போலியான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இதை நம்பி அங்கு பணிபுரியும் பெண்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களையும் பணியில் சேர்த்துவிடுகின்றனர். தமிழகத்தைத்தாண்டி, பீகார், மணிப்பூர் போன்ற மாநிலப் பெண்களும் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்காக, தொடங்கப்படும் ஹாஸ்டல்களுக்கு முறையான அனுமதி பெறப்படுவதில்லை.  அந்த ஹாஸ்டல்களில் முறையான வசதிகள் ஏதும் இல்லை.

இந்தப் பெண்கள் வலுக்கட்டாயமாக நைட் ஷிப்ட்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதன் காரணமாக அந்தப் பெண்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. தற்போது நடைபெற்றுள்ள கூட்டத்தில், இந்தப் பிரச்னையை சட்டரீதியாக கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளதாக பெண் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.