வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (26/12/2017)

கடைசி தொடர்பு:10:41 (26/12/2017)

தினகரனுக்கு முன்கூட்டியே வாழ்த்துச் சொன்ன திருமாவளவன்! - பெரியார் திடலில் நிகழ்ந்த சுவாரஸ்யம்!

ந்தை பெரியாரின் 44-வது நினைவு நாளான நேற்று எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ’பெண் ஏன் அடிமையானாள்? எப்படி விடுதலை பெறுவாள்?’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. நினைவு தினத்தின் ஒரு பகுதியாக சென்னை சிம்சனிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின் அங்கிருந்து பெரியார் திடல் வரை ஊர்வலமாக சென்று அங்குள்ள அவரது  நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

திருமாவளவன்

”டி.டி.வி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது!”

 நினைவிடத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ சமூக நீதிக்காகவும் சாதி ஒழிப்புக்காகவும் பெண் விடுதலைக்காகவும் தனது வாழ்வை முழுமையாக அற்பணித்துக் கொண்டவர் தந்தை பெரியார். அவர் கொள்கை வழியில் சென்று தொடர்ந்து போராட உறுதி ஏற்போம்” என்றார்.
அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் நிலவரம் குறித்தும் பேசிய திருமாவளவன்,”  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் மிக அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவர் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகி விட்டது. அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். மாலை ஐந்து மணிக்கு மேல் வெளியான தேர்தல் முடிவுகளுக்கு காலையிலேயே வாழ்த்து தெரிவித்தார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது. நினைவஞ்சலிக்குப் பிறகு தொடங்கிய கருத்தரங்கத்தில் புதுடில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் ஓவியா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் தமிழினி, திராவிட கழகத்தின் பிரசார செயலாளர் அ.அருள்மொழி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் பங்கேற்றார்கள்.

கட்சிகளுக்குள் பெண்ணுரிமை தேவை

பெரியார் திடல்கருத்தரங்கத்தில் பேசிய தமிழினி, “ ஒவ்வொரு கட்சிகளும் முதலில் தங்களது கட்சிக்குள்ளே பெண்களுக்கான முன்னுரிமையை அளிக்கவேண்டும். அதன்பிறகே நாடாளுமன்றத்தில் அவர்கள் 33% இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாக அமையும். தேர்தல் பிரசாரங்களில் பெண்கள் ஈடுபட்டால் கூட பின்னணியில் ஆண்கள்தான் இயக்குகிறார்கள். இந்துத்துவத்தால்தான் சாதியும் அந்த சாதியினால்தான் இந்த பெண் அடிமைத்தனமும் உருவானது என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் தாமரை மலரும் மலரும் என்று சொல்கிறார்கள்.  ஆனால், தாமரை மலராது. மூடநம்பிக்கைத்தனம் ஒழியும், பெண் அடிமைத்தனம் ஒழியும், அறிவு பெருகும், சொத்துரிமையில் பெண்களுக்கும் பங்கு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

 

’பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற பெரியாரின் புத்தகம் தம்மை எவ்வாறு பெரியாரை நோக்கி பயணிக்கவைத்தது என்பதைப் பற்றிப் பேசிய எழுத்தாளர் மாலதி மைத்ரி, “ நமக்கு இந்த பெண் அடிமைத்தனத்தை எடுத்துரைக்க பெரியார் ஒரு வழிகாட்டியாக இருந்தார். அவருக்கு யார் இருந்தார்கள் என்பது தெரியாது. பெரியாரைப் படித்துவிட்டு மார்க்சியம் படிக்க ஆரம்பித்து பிறகு அது சார்ந்த இயக்கங்களில் வேலை செய்யத் துவங்கினேன். ஆனால், அங்கேயும் பெண்ணுரிமை பேசக்கூடாது என்று தடை விதித்தார்கள். மார்க்சியம் பேசும் தளத்தில் பெண்ணுரிமை பேசக்கூடாது என்று சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் தராத எந்த ஒரு சூழலும் வளர்ச்சி அடையாது. பெண் விடுதலை உணர்வு முதலில் பெண்களிடத்தில் தொடங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அடுத்த தலைமுறையும் அதே விடுதலை உணர்வோடு இருக்கும்” என்றார்.

 

”2ஜி விவகாரத்தில் மூக்கறுபட்டு உட்கார்ந்திருக்கின்றனர்!”

திடலில் அ.ராசா

அடுத்து பேசிய வீரமணி, “2ஜி வழக்கை வைத்து பிரசாரம் செய்தவர்கள்தான் இன்று ராசாவுக்கும் கனிமொழிக்கும் விடுதலை கிடைத்தவுடன் மூக்கறுபட்டு உட்கார்ந்திருக்கின்றனர். இப்படிப் பிரசாரம் செய்தவர்கள்தான் அன்று பெரியார் சொன்னதாகவும் தவறாகப் பிரசாரம் செய்தார்கள். ஆனால், நீதிமன்றமே அவர்களைப் பெரியாரிடம் மன்னிப்பு கேட்க வைத்தது” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்