ஆர்.கே.நகர் தேர்தல் நோட்டா பெற்றது 1.34 சதவிகிதமா...23.84 சதவிகிதமா? | 23.84 percentage of voters have not voted in RK Nagar byelection

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (26/12/2017)

கடைசி தொடர்பு:11:04 (26/12/2017)

ஆர்.கே.நகர் தேர்தல் நோட்டா பெற்றது 1.34 சதவிகிதமா...23.84 சதவிகிதமா?

நோட்டா

தினகரனின் வெற்றி, அ.தி.மு.க-வின் தோல்வி, தி.மு.க-வின் டெபாசிட் இழப்பு என்பதெல்லாம் ஒருபக்கம் என்றாலும் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை என்ற மக்களின் எண்ணம் அதிகம். நோட்டாவுக்கு வாக்குகள் அடிப்படையில் ஐந்தாம் இடம் என்றாலும் நிஜத்தில் நோட்டாவின் இடம் மூன்றாமிடம் தான். 

எப்படி என்கிறீர்களா? தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு வரை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டது. தி.மு.க தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் போலி என்று நீக்கப்பட்டார்கள். ஆக, சுத்தமான வாக்காளர் பட்டியல்தான் இந்த இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதன்படி பார்த்தால் கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலைவிட, தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை, 26,324 குறைந்துள்ளது. அதேசமயம், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, கடந்த பொதுத்தேர்தலைவிட 2875 வாக்குகள் கூடுதல்.

ஒரு தொகுதியில் எப்போதுமே வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் வழக்கம். புது வாக்காளர்கள் சேரச் சேர இது கூடும். அதேசமயம், தொகுதி மறுவரையறையின்போது குறையலாம். ஆனால், ஆர்.கே. நகரில் அப்படி வரையறை செய்யப்படவில்லை. ஆக, கடந்த தேர்தலில் போலி வாக்காளர்கள் கூடுதலாக இருந்துள்ளனர். இந்த 26,324 வாக்காளர்களில் சிலர் முகவரி மாறியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக மாற வாய்ப்பில்லை. எனவே, குறைந்தபட்சம் 20 ஆயிரம் வாக்காளர்கள் போலிகளே!

2017 இடைத்தேர்தலில் ஆர்.கே.நகரின் மொத்த வாக்குகள் 2,28,234 அதில் பதிவான வாக்குகள் 1,76,890 ஆக இதில் வாக்களிக்காத 22.50 % மக்கள் வாக்களிக்க விருப்பமற்றவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். நோட்டாவுக்கு விழுந்த 1.34% வாக்குகளையும் சேர்த்தால், 23.84% வாக்குகள் யாருக்கும் பதிவாகவில்லை. ஆக, இதுதான் நோட்டாவின் சதவிகிதம். இந்த அடிப்படையில் டி.டி.வி தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு அடுத்தபடியாக நோட்டா இடம்பிடித்திருக்கிறது.

வாக்கு

 


டிரெண்டிங் @ விகடன்