வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (26/12/2017)

கடைசி தொடர்பு:13:18 (26/12/2017)

 ' விஜயகாந்த் நிலைதான் தினகரனுக்கும்!'   - அமைச்சர்களிடம் கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதிப்பிலிருந்து ஆளும்கட்சி இன்னும் மீளவில்லை. சசிகலா புஷ்பா உள்பட சசிகலா குடும்பத்தால் பழிவாங்கப்பட்டவர்களும் தினகரனை சந்திப்பதை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர். ' ஒரு தேர்தலால் மட்டும் அனைத்தையும் முடிவு செய்ய முடியாது. 27 சதவிகித வாக்குகளைத் தக்க வைத்திருக்கிறோம். நமக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி' என கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உள்கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும், இடைத்தேர்தலுக்கு சில வாரங்கள் முன்புதான் முடிவுக்கு வந்தன. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கட்சிக்கு வழிகாட்டும் குழுவை அமைத்தனர். ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இரட்டை இலைச் சின்னமும் வந்து சேர்ந்தது. சின்னம் கிடைத்ததில் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பெரும் சவாலுடன் எதிர்கொண்டனர். குக்கர் சின்னம் கிடைத்த அன்றே களவேலைகளில் இறங்கியது தினகரனின் பெரியகுளம் டீம். வீடுகள்தோறும் சின்னத்தைக் கொண்டு சென்றனர். 'பா.ஜ.க ஆதரவில் அ.தி.மு.க செயல்படுகிறது' என்ற தோற்றம் உருவானதால், சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக, மசூதி வாயிலில் குல்லா தினகரன்அணிந்து வாக்கு சேகரித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

' நாங்கள் பா.ஜ.கவுடன் கூட்டணி சேரவில்லை. அம்மா வழியிலேயே ஆட்சி செலுத்துகிறோம்' எனப் பிரசாரம் செய்தும் எடுபடவில்லை. தேர்தல் முடிவை அடுத்து, ' தினகரனிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்பன போன்ற குரல்கள் அ.தி.மு.கவுக்குள்ளேயே எழத் தொடங்கிவிட்டன. இதனை எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி, ' கட்சிக்குத் துரோகம் செய்பவர்கள் களையெடுக்கப்படுவார்கள்' என அறிவித்த கையோடு, தினகரனுக்குத் தேர்தல் வேலை பார்த்த நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி, வி.பி.கலைராஜன், பாப்புலர் முத்தையா ஆகிய நிர்வாகிகளைக் கட்சியைவிட்டு நீக்கினர். இந்த நீக்கத்தை தினகரன் தரப்பினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

" ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளால் ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் வரப் போவதில்லை. இந்தத் தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்தது ஒருவகையில் நல்லது என்றே முதல்வர் தரப்பில் நினைக்கிறார்கள். ' ஒருவேளை இரண்டாம் இடத்துக்குத் தி.மு.க வந்திருந்தாலும், ' இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது' என ஸ்டாலின் பிரசாரம் செய்திருப்பார். இப்போது ஸ்டாலின் தலைமை மீதே கேள்வி எழுப்பப்படுவதால், எடப்பாடி பழனிசாமி அரசின் ஸ்திரத்தன்மை குறித்து அவர் பேச மாட்டார். தவிர, மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க தி.மு.க எம்.எல்.ஏ-க்களே தயாராக இல்லை' எனவும் அவர் உறுதியாக நம்புகிறார். இதுகுறித்து நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர், ' ஒரு தொகுதியில் பணத்தை வாரியிறைத்து வெற்றி பெற்றுவிட்டு மாநிலம் முழுவதும் செல்வாக்கு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்கிறார்கள்.

அப்படி அவர்களுக்கு எந்த ரவீந்திரன் துரைசாமிசெல்வாக்கும் இல்லை. நமது வாக்கு வங்கியை தக்கவைத்திருக்கிறோம். அதில் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு உள்பட பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் எல்லாம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துக்கொண்டேதான் போகும். அதற்குள் அரசியலில் இருந்தும் அவர் காணாமல் போய்விடுவார். இந்தத் தேர்தலில் தி.மு.க மூன்றாம் இடம் வந்ததும் ஒருவகையில் நல்லதுதான். உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தி, தினகரன் தரப்பினருக்கும் தி.மு.கவுக்கும் நமது செல்வாக்கைக் காட்ட வேண்டும்' எனக் பேசினார்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி, " அரசியல் களத்தில் தன்னுடைய இருப்பிடத்தை விட்டுக் கொடுக்க தற்போதுள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் விரும்பவில்லை. கீழ்மட்டத்தில் இருந்து கட்சியின் உயர்பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. எவ்வளவு நெருக்குதல் வந்தாலும் தினகரனுடன் சமரசம் செய்துகொள்ள யாரும் தயாராக இல்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. தமிழக அரசியல் களத்தில் வரக்கூடிய தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா... என்ற முழக்கம்தான் அதிகரிக்கும். இந்தத் தேர்தலில் தி.மு.கவின் தோல்வி எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பலப்படுத்தியுள்ளது என்றே எடுத்துக்கொள்ளலாம். புதிய எதிரி முளைத்திருப்பதை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளனர். வரும் தேர்தல்களில் சிறுபான்மை வாக்குகளைப் பெறுவதில் ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் இடையில் போட்டி நிலவும். சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பதால் மும்முனை போட்டிதான் ஏற்படும். இந்தப் போட்டி எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாக மாறும்" என்கிறார். 

" 2006 சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்த், விருத்தாசலத்தில் மட்டுமே வென்றார். தே.மு.தி.கவின் மற்ற வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினார்கள். விஜயகாந்த் பெற்ற 8 சதவிகித வாக்கு மட்டுமே பேசப்பட்டது. அதேபோன்ற நிலைதான் தினகரனுக்கும் ஏற்படப் போகிறது. இதை எடப்பாடி பழனிசாமியும் உணர்ந்து வைத்திருக்கிறார்" என்கின்றனர் அமைச்சர்கள் வட்டாரத்தில். 


டிரெண்டிங் @ விகடன்