வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (26/12/2017)

கடைசி தொடர்பு:13:40 (26/12/2017)

பழனி பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய அரசுப் பேருந்து! - 6 பேர் பலியான பரிதாபம்

பழனிக்குப் பாதயாத்திரை சென்ற 6 பேர் அரசுப் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருப்பூர் அருகே நிகழ்ந்துள்ளது.

pazhani

திருப்பூரிலிருந்து 40-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட குழு ஒன்று பழனி மலை முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக நேற்று கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் தாராபுரம் அருகேயுள்ள குப்பண்ணன் கோயில் என்ற இடத்தில் நேற்று இரவு தங்கிய அந்தக் குழுவினர், இன்று அதிகாலை எழுந்து மீண்டும் பழனி நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது திருப்பூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்றுக்கொண்டுடிருந்த அரசுப் பேருந்து ஒன்று பாத யாத்திரை சென்றுகொண்டிருந்த கூட்டத்தினர் மீது மோதியதில் பெரும் விபத்து நேரிட்டது. அதில் திருப்பூரைச் சேர்ந்த மகேஸ்வரி, விஜயா, நாகராஜ், காளிமுத்து, ராஜாமணி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சாந்தி என்ற பெண் படுகாயத்துடன் மிகவும் ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி அங்கு உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அப்பகுதியில் விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.