“கையால குழி தோண்டி பிணைங்களைப் புதைச்சோம்!” சுனாமியின் நேரலை கண்ணீர் நினைவுகள் #Tsunami | The total recall of Tsunami day that shook Tamil Nadu 13 years ago

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (26/12/2017)

கடைசி தொடர்பு:14:20 (26/12/2017)

“கையால குழி தோண்டி பிணைங்களைப் புதைச்சோம்!” சுனாமியின் நேரலை கண்ணீர் நினைவுகள் #Tsunami

சுனாமி

“கடல் பொங்கி வருதுனு கூட்டம், கூட்டமாக மக்கள் ஓடிவந்ததைப் பார்த்து ஒண்ணும் புரியல. அந்த நேரத்தில் எனக்கு ஏதோ அசரீரிக் குரல் கேட்டதைப் போல, வீட்டில் இருந்தவங்களைப் பார்த்து, 'எல்லோரும் மொட்டை மாடிக்கு வாங்க'னு சொன்னேன். இல்லைன்னா என் குடும்பத்திலேயும் பெரிய இழப்பாயிருக்கும்" என 'சுனாமி' நாளின் நினைவே அச்சம் தருவதைப் போன்ற முகக் குறிப்போடு பேசத்தொடங்குகிறார் ஆர்.எம்.பி.ராஜேந்திரன். நாகப்பட்டினம், கீச்சாங்குப்பத்தில் உள்ள இவரின் வீடு கடலிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ளது. மொட்டை மாடியில் நின்றால் கடலின் பிரமாண்டத்தைப் பார்க்க முடியும். மளிகை கடை நடத்திவருகிறார். அந்தப் பகுதியின் முன்னேற்றத்துக்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திவருபவர்.

2004-ம் ஆண்டு உலகையே துயரத்தில் ஆழ்த்தியது சுனாமி. சுமித்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலில் உருவான பேரலைகள் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் பேரழிவுக்குள்ளான பகுதி நாகப்பட்டினம். அங்கு, சுனாமி பேரலையை, தனது வீட்டின் மொட்டை மாடியில் குடும்பத்துடன் நின்று பதபதைக்கும் மனநிலையோடு பார்த்தவர் ஆர்.எம்.பி. ராஜேந்திரன். அன்றைக்கு நடந்ததைப் பற்றி அவரிடம் கேட்டோம். 

tsunami

“அன்னிக்கு காலையில, நான் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். எம் பொண்ணு மீன் வாங்கிட்டு வரச் சொல்லிட்டு இருந்தா. திடீர்ன்னு மக்கள் கூட்டம், கூட்டமாக ஓடி வந்தாங்க. சில பேரு ‘குடிசைங்க பற்றி எரியுது'ன்னும் இன்னும் சில பேர் 'கடல் பொங்குது'ன்னும் சொன்னாங்க. என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியல. வீட்டில இருந்தவங்களை அழைச்சிட்டு மொட்டை மாடிக்குப் போயிட்டேன். 

அங்கிருந்து கடலைப் பார்த்தா, பெரிய ஆர்ப்பரிப்போட அலைகள் ஆவேசமாகக் கரையை நோக்கி வந்துட்டு இருந்துச்சு. அதை எப்படி விவரிக்கிறதுன்னே தெரியல. ராட்சச வேகத்துல வந்த அலைங்க எங்க வீட்டுச் சுவத்துல 'டம்'னு மோதிச்சு. கரையோரமாக அடுக்கி வைச்சிருந்த பனை மரங்களை, சின்னக் குச்சிகளைப் போலத் தூக்கி எறிஞ்சுது. டன் கணக்குல இருக்குற படகுகளை, பொம்மைகளைப் போல வீசுணுச்சு. வீட்டு பக்கத்துல இருந்த டிரான்பார்மை அநாயசமாகப் பிடுங்கி தூக்கிப் போட்டுச்சு. எம் பக்கத்துல நின்னுட்டு இருந்தவங்க பயத்துல அலறினாங்க. ஏன்னா, அவ்வளவு உயரத்துல கடல் அலைகளை நாங்க பார்த்ததே இல்லை. ஏழு நிமிஷம் இருக்கும், அந்த இடத்தையே சின்னாபின்னாவாக்கியிடுச்சு. அப்பறம் அப்படியே அலைகள் உள்வாங்குனதுல படகு, பனை மரம்னு கிடந்ததெல்லாம் கடலுக்குள்ள போயிடுச்சு. சரி, முடிஞ்சுப் போயிடுச்சுனு நினைச்சா, இரண்டாவது முறையும் கடல் பொங்கி அலைகள் வர ஆரம்பிச்சுது. இது முதல்ல வந்ததோடு பெரிய பெரிய அலையா இருந்துச்சு. 

அங்கே, இங்கே எதையாவது பிடிச்சுட்டு உயிர் தப்பினவங்களையும் இது இழுத்துட்டு போயிடுச்சு. என்ன செய்யறதுன்னே ஒண்ணும் புரியாம, நடக்கிறதைப் பார்த்துட்டு இருந்தோம். இரண்டாவது முறையும் அலை திரும்பப் போனதும், கொத்து கொத்து உடல்கள் கிடந்துச்சு. பக்கத்து வீட்ல இருக்கிறவங்க, சொந்தக்காரங்க எல்லாம் என்னாச்சுன்னு தெரியல. சரி, நாம போய்ப் பார்த்துட்டு வரலாம்னு இறங்கிப் போனேன். அவங்க, எப்படியோ உயிரைப் பிடிச்சுகிட்டு எங்க வீட்டை நோக்கி வந்தாங்க. 'அப்பா சீக்கிரம் மேல வாங்க... மறுபடியும் அலை வருது'னு எம் பொண்ணு மொட்டை மாடியிலேருந்து கத்தினா. நான் அவங்க இழுத்துகிட்டு அவசரம் அவசரமாக மொட்டை மாடிக்குப் போனேன். மூணாவது முறை, பெரிய அளவுக்கான அலை வரல. 

tsunami

வீட்டு மாடில நூறு பேருக்கும் மேல, நின்னுட்டு இருந்தோம். கடற்கரையைப் பார்த்தா கொத்து, கொத்து மனித உடல்கள்... இந்த அவலத்தைப் பார்க்கிற நிலை எதிரிக்கும் வரக்கூடாதுனு நினைச்சுகிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு, என்ன நடந்தாலும் பரவாயில்லைனு கீழே இறங்கினேன். வீடே மூழ்கி, ஒரு பொருளும் இல்லாம இருந்துச்சு. தெருவுல இறங்கிபோனப்ப, ஏகப்பட்ட பேர் செத்துக் கிடந்தாங்க. என்னோட பழகினவங்க, முகம் தெரியாதவங்கனு பிணங்களா நிறைஞ்சு கிடைந்துச்சு. அதையெல்லாம் தாண்டிப் போனால், கட்டிக்கொண்டிருந்த பாலத்து மேல ஏறி, ஆயிரம் பேருக்கும் மேல நின்னுட்டு இருந்தாங்க.

தப்பிச்சவங்களுக்கும் நிம்மதியில்லை. ஏன்னா, அவங்க குடும்பத்தினரை இழந்திருந்தாங்க. சின்னையன்னு ஒருத்தரோட மனைவி, எட்டுப் புள்ளைங்க எல்லோரும் சுனாமியில செத்துட்டாங்க. அவர் மட்டும் பிழைச்சிருந்தாரு. இப்படிப் பல பேரு. 

சரி, அடுத்தது என்ன பண்றதுன்னு, அதிகாரிகளைப் பார்த்தேன். இளைஞர்களை ஒண்ணு சேர்த்தேன். முதல் வேலையாக உடல்களை அடக்கம் பண்ணனும். அப்போ கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் சாரும் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தார். இறந்தவங்களை அடையாளம் பார்த்துகிட்டு, பொதைக்கிற, எரிக்கிற வேலையைப் பார்த்தோம். சின்ன கம்பு, உடைந்த படகின் பாகம்னு கிடைச்சதை வெச்சு குழிகளைத் தோண்டினோம். எதுவுமே இல்லாதப்ப வெறும் கையாலேயே குழி தோண்டினோம். அப்பறம் இயந்திரம் வந்தப்பறம், ஒரே குழியில 320, 126ன்னு மொத்தமாகப் புதைச்சோம்.

நிறையத் தொண்டு நிறுவனங்கள் வந்தாங்க. உதவினாங்க. அதில பலர் உண்மையான அக்கறையோட வந்தாங்க. சில நிறுவனங்கள் விளம்பரத்துக்காக வந்தாங்க. எப்படியோ உயிர் தப்பினவங்க வாழ்க்கையை வாழறதுக்கான ஏற்பாடுகள் நடந்தால் போதும்னு நினைச்சோம்.

சுனாமி பேரழிவு நடந்து பதிமூணு வருஷமானாலும் அதோட இழப்புல இருந்தவங்க இன்னும் முழுமையா மீண்டுவரல. மக்கள் மட்டுமல்ல, நாகப்பட்டினம் நகரமும் தொழில்வளத்துல மீண்டுவரல. அரசாங்கம் இனிமேலாவது இதில் அக்கறை காட்டினா நல்லது” என்று ஆதங்கத்தோடு முடித்தார். 

அழிவுகளின் நினைவுகளும் சுடத்தான் செய்கின்றன.


டிரெண்டிங் @ விகடன்