வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (26/12/2017)

கடைசி தொடர்பு:20:29 (26/12/2017)

“எங்களுக்கு இவங்க மட்டும் விவசாயிகள் தின வாழ்த்து சொல்லட்டுங்க..!” - ஒரு விவசாயியின் புலம்பல்

விவசாயி

“ஆள் அம்பு சேனைன்னு இந்த நாட்டையும் மாநிலத்தையும் ஆளும் மகாராசாக்களே... ‘அண்ணன் எப்படா கிளம்புவான் திண்ணை காலியாகும்'ன்னு கிராமத்துல ஒரு பதமான சொலவடை சொல்வாங்க..அதுபோல, 'எப்படா விவசாயி சாவான், அவனை ஏறி மிதிச்சு, அவன் நிலத்தை தோண்டி மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் எடுக்கலாம்'ன்னு ஆவலாக திரியிற கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளே... உங்க அத்தனை பேருக்கும் ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையில் எஞ்சி நிற்கும் இந்த ஏழை விவசாயியின் கண்ணீர் கடுதாசிங்க. போன வாரம் விவசாயிகளோட தேசிய தினம்ங்களாம். பேப்பர்ல சேதி படிச்சேன். தினம் தினம் உழவன் பொழப்பு ரணம் ரணம்ங்கும்போது, எதுக்குங்க எங்களுக்கு இந்தப் பொல்லாத தேசிய தினம்?!.

farmers

‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்'ன்னு இந்த நாட்டுக்கு வெள்ளைக்காரனை வெரட்டி அடிச்சுட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தி அய்யா சொல்லிட்டுப் போனார். ஆனா, எங்க அத்தனை விவசாயிகளின் முதுகெலும்புகளும் உங்களால உடைஞ்சு கிடக்கு. 'நாங்க சேத்துல கால்வச்சாதாம் நீங்க சோத்துல கைவைக்க முடியும்' ன்னு எந்த மவராசனோ சொல்லி வெச்சுட்டுப் போனாருங்க. ஆனா, இந்த அரசாங்கமும் கார்ப்பரேட் கம்பெனிகளும் எங்க கைகால்களை உடைச்சு மூலையில் உட்கார்த்தி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்கிறார்களே.
என் தாத்தன் காலத்துல டெல்டா பகுதியில் கரைபுரண்டு வந்த காவிரித் தண்ணீரில் முப்போகம் விவசாயம் செஞ்சுருக்காங்க. கொள்ளு வெரையாட்டம் 1009 ரக நெல்லு கொள்ளை கொள்ளையா விளையும்ய்யா.

நாங்க நல்லா சாப்புட்டு, மூணு தடவை ஏப்பம் விடுவோம். இப்போ, விவசாயம் பொய்த்து, புழுத்துப் போன ரேஷன் அரிசியைப் பொங்கி தின்னுட்டு, ஏப்பம்கூட விடாம செத்துப் போயிருக்கோம். காவிரியில் கரைபுரண்டு வந்த தண்ணி, இப்போ அரசாங்கமும், ஆளுங்கட்சிப் புள்ளிகளும் போட்டி போட்டுக் கொண்டு அதுல மணல் அள்ளி மணல் அள்ளி விழுந்த பள்ளத்துல கூட தண்ணீர் போகலை. காவிரி கர்நாடகாவுக்கு வடிகாலா தெரியுது. நம்ம மாநிலத்தை ஆண்ட, ஆளுகிற சாமிகளுக்கு,'மணல் தரும் அட்சயபாத்திரமா' தெரியுது. ஆனா,விவசாயத்தை தவிர வேறேதும் தெரியாத எங்களுக்குக் காவிரி என்பது உயிர்நாடி என்பது ஏன் உங்களுக்குப் புரியல?. 

ஊர், உலகத்துக்கு எல்லாம் காலம் காலமா சோறு போடுற வம்சமய்யா விவசாயிகள் வம்சம். வழிப்போக்கர்கள், தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு வந்தா, அவர்களை உட்கார வெச்சு தழைவாழை விருந்தே போட்டு அனுப்பும், விருந்தோம்பல் பண்ற கூட்டமய்யா நாங்க. அதனால்தான், கிராமங்களில் வீடுகள்ல திண்ணை வெச்சு வீடு கட்டுனோம். ஆனா, காசு பணம் சேர்ந்ததும் முரட்டுத்தனமா சுவர்களை வீட்டைச் சுத்தி கட்டி, நாலைந்து நாய்களை வாசல்ல கட்டி,‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று உறவுகளையே விரட்டி அடிக்கிற உங்களுக்கு எங்கே தெரியப் போவுது விவசாயிகளின் வாழ்வும், தாழ்வும். அப்புறம், எதுக்கு எங்களுக்கு ஒரு தினத்தை அறிவிச்சு, பத்தி பத்தியா எங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறீங்க. உங்க ஆட்சியில எங்களுக்குப் பாலாறையும், தேனாறையும் திறந்துவிட்டோம்ங்கிற நினைப்பிலா?!. போங்கய்யா போக்கத்ததனம் பண்ணாம.

நீங்க வேணும்னா, டெல்டாவில் எங்க வயல்களுக்கு அடியில் இருக்கிற பல லட்சம் கோடி வருமானம் தர்ற மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ்களை எடுத்து, பேங்க் லாக்கர்களை நிரப்பப் பார்க்கலாம். கோவை பக்கம் கெயில் குழாய்களைப் பதித்து, விளைநிலங்களை மலடாக்கலாம். காலம்காலமாக பரம்பரை பரம்பரையா இந்த லோல்பட்ட விவசாயத்தையே கட்டி அழுகிறோமே..நாங்க கோடி கோடியாக இந்தத் தொழில்ல சம்பாதிக்கலை. இருந்தாலும், இந்தத் தொழிலையே கட்டிக்கிட்டு அழுவுறோமே ஏன்?. ஏன்னா..இத நாங்க தொழிலா பார்க்கலை. 'இதுமூலம் எத்தனை பேரை பசியாத்துறோம்'ங்கிற ஒத்த சந்தோஷம்தான் இத்தனை வருஷமும் எங்களை இந்த தொத்த விவசாயத்தை செய்ய வைக்குது. ஆனால், 'அதையும் செய்ய வேண்டாம்'ன்னு நெனச்சு, எங்க வயல்களை மலடாக்கப் பார்க்கிறீங்க. அப்புறம், என்ன கரிசனத்துல மக்கா எங்களுக்குத் தேசிய தினம் வாழ்த்துச் சொல்றீங்க?.

இந்தத் தொழில்ல எவ்வளவோ கஷ்டங்களை வறட்சிகளை எங்க சமூகம் பார்த்திருக்கு. ஆனா, முன்பெல்லாம் 'ஒரு விவசாயி கடன்ல மூழ்கி செத்தான்'ங்கிற சேதி இல்லையே. ஆனா, 2004 லயும், கடந்த வருஷமும்தான் எங்க ஆட்கள் கொத்துக் கொத்தாக செத்தாங்க. சாப்பிட வக்கத்து எலிக்கறி தின்னாங்க. ஆனா, அப்பயும் செங்கோல் 'நிமித்தி' ஆட்சி செய்யும் நீங்க ஆயிரக்கணக்குல விவசாயிகள் செத்தத மறைச்சு, 'சிலபேர்தான்'ன்னீங்க. 'டேஸ்ட்டுக்காக எலிக்கறி தின்னாங்க'ன்னு முழுபூசணிக்காயைச் சோத்துல மறைச்சீங்க. ஆனால், இவ்வளவு பாவங்களை, இவ்வளவு மரண ஓலங்களைச் செமித்துவிட்டு, இப்போ விவசாயிகள் தின வாழ்த்து சொல்ல, உங்க நாக்கு எப்படிதான் பொரளுதோ?. அதான், அரசியல்வாதிகளுக்கு ரெட்டை நாக்குதானே!

 Farmers

நீங்க எந்தத் தொழில் வேணும்னாலும் செய்ங்க. யாரை வேணும்னாலும் அடிங்க. குத்துங்க கொல்லுங்க. எங்களை விரட்டி அடிச்சுட்டு, எங்க நிலங்கள்ல கண்டதையும் எடுத்து, எங்க நிலங்களைப் பாலையாக்குங்க. ஆனால், 'விவசாயிகளும், விவசாயமும் இந்த நாட்டுக்குத் தேவையில்லை'ன்னு சாசனம் எழுதிக் கொடுத்துட்டு செய்ங்க. நாங்க கூண்டோடு வேற தொழிலுக்கு மாறிடுறோம். இல்லைன்னா, மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கிட்டு வேற நாட்டுக்கு அகதிகளாப் போயிடுறோம். அத செய்யாம.. இப்படி எங்களை வதைக்க வேண்டாம்; அல்லல்படுத்த வேண்டாம். வெளிநாட்டுக்கார கம்பெனிகளெல்லாம் நம்ம தண்ணியில தயாரிக்கிற கோகோகோலா, பெப்ஸிக்கு எல்லாம் அவனே விலை நிர்ணயிக்கிறான். ஏ.ஸியில உட்கார்ந்து கோடிகோடியா சம்பாதிக்கிறான். ஆனா, வெறும் நீச்சத்தண்ணியை மட்டும் குடிச்சு, வெயில்வேனைன்னு பார்க்காம நிலத்துல பொரண்டு, நாங்க விளைவிக்கிற பொருளுக்குகூட நாங்க விலை நிர்ணயம் பண்ண முடியலை. அப்புறம், என்ன அர்த்தத்துல நீங்க எங்களுக்குத் தேசிய தினம் கொண்டாடுறீங்க?.

‘இந்த விவசாயத்துல கெடந்து புரண்டு கருக்காகூட பெயராத வாழ்வு வாழ்ந்த எங்களின் நிலை எங்களோட போகட்டும்'ன்னு எங்க பிள்ளைகளை நல்ல படிப்பு படிக்க வச்சு, கைநிறைய சம்பாதிக்கிற வேலைக்கு அனுப்பப் பார்த்தோம். ஆனால், அந்தப் புள்ளைங்கதான் விவசாயத்தைக் காப்பாத்துறேன்னு போராடக் கிளம்புதுங்க. நெடுவாசல், கதிராமங்கலம்னு விவசாயத்தை அழிக்கப் பார்க்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடக் கிளம்புதுங்க. ‘நாட்டு மாடுகளைக் காப்போம்'ன்னு ஜல்லிக்கட்டுக்காகப் போராடி, உலக வரலாற்றை படைச்சுதுங்க. எங்க அடிவயிறு அப்போ குளிர்ந்துச்சுய்யா. எங்க இத்துப்போன விவசாயப் பொழப்புல, செத்துப்போன நம்பிக்கை இந்தப் பிள்ளைகளால துளிர் உட்டுருச்சுய்யா. ஏ யப்பா.. ஏஸி ரூமு ஆளும் மகராசாக்களா.. கோட்டுசூட்டு கம்பெனி முதலாளிகளா.. கைநாட்டு எங்களை ஏமாத்த பார்த்தீங்க; எங்க கழப்பையை உடைச்சே, எங்க பொரணியில அடிச்சீங்க. இது படிச்ச புள்ளைங்க... நாங்க விளைவிச்ச விவசாயம் வேணும்ன்னா உங்களால பதரா போயிருக்கலாம். ஆனால், ‘ஆதித்தொழிலான விவசாயத்தை காப்போம்'ன்னு விவரமா படிச்ச புள்ளைங்க நாலாபக்கமும் திரண்டு கிளம்புறாங்க. அவங்களுக்குப் பதில் சொல்லிட்டு, எங்க விவசாயத்து மேல கை வைங்க. அதுவரை, எங்களை காக்க குலசாமிகளா திரளும் இந்த இளந்தாரி பிள்ளைகள் மட்டும் சொல்லட்டும் எங்களுக்கு விவசாயி தின வாழ்த்துகள்".


டிரெண்டிங் @ விகடன்