ஆட்சியர் அறைக்குள் ஒரு மணிநேரம் ஆட்டம் காட்டிய மரநாய்! | A weasel is entered into Nellai district collector's room

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (26/12/2017)

கடைசி தொடர்பு:15:20 (26/12/2017)

ஆட்சியர் அறைக்குள் ஒரு மணிநேரம் ஆட்டம் காட்டிய மரநாய்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அறைக்குள் மரநாய் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாகப் போராடி மரநாயைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மரநாய்

களக்காடு-முண்டந்துறை வனப் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ள நெல்லை மாநகருக்குள் வன விலங்குகள் அடிக்கடி நுழைந்து பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே சிறுத்தை, கரடி, சிங்கவால் குரங்கு, ராஜநாகம் உள்ளிட்டவை நெல்லைக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தின. இந்த நிலையில், நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்குள் மரநாய் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் அலுவலக அறையை ஊழியர் ஒருவர் சுத்தம் செய்தபோது, அங்கு ஏதோ விலங்கு பதுங்கி இருப்பதைக் கண்டார். பூனையைப் போல அது இருந்ததால், அதை அவர் விரட்ட முற்பட்டிருக்கிறார். அப்போது விநோத ஒலியை எழுப்பியபடி அந்த விலங்கு அவர்மீது பாய்ந்ததால், பதறிப்போன ஊழியர் உடனடியாக அறையைப் பூட்டிவிட்டு வெளியே ஓடிவந்து நடந்த சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது, அங்கு பதுங்கி இருப்பது மரநாய் என்பதை அறிந்தனர். அதைப் பிடிக்க முற்படும்போது கால் நகங்களால் பிறாண்டி எதிர்த் தாக்குதல் நடத்தும் என்பதால் மிகுந்த கவனத்துடன் அதைப் பிடிக்க முயற்சித்தனர். ஆங்காங்கே புகுந்துகொண்டதுடன், எதிர்த் தாக்குதலுக்கும் தயாராக இருந்ததால் சுமார் ஒரு மணி நேரமாகப் போராடிப் பிடித்தனர்.

தீயணைப்புத் துறை பிடித்தது

பின்னர், அதை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுசென்றனர். அறைக்குள் மரநாய் பதுங்கி இருந்தபோது மாவட்ட ஆட்சியர் அறைக்குள் இல்லாததால் தப்பினார். இருப்பினும், ஆட்சியர் அறைக்குள் மரநாய் நுழைந்தது குறித்து அதிகாரிகள் பதற்றத்துடன் விவாதித்து வருகிறார்கள்.