வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (26/12/2017)

கடைசி தொடர்பு:16:32 (26/12/2017)

‘நல்ல மனசுக்காரங்க இருக்காங்க!’ - திருச்சியில் ஏழைகளின் மனம் குளிர்விக்கும் ‘அன்புச் சுவர்’

மனமிருந்தால் மற்றவர்களுக்கு உதவலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது ‘அன்புச் சுவர்’ எனும் மையம்.

திருச்சி மாநகராட்சி சார்பில், அந்த நகர மக்களிடம் உள்ள பொருள்களைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள் எனும் நோக்கத்தில் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது ‘அன்புச் சுவர்’ மையம்.

அன்புச் சுவர்

திருச்சி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் திறந்துவைத்தார்.

“இந்த ‘அன்புச் சுவர்’ மையம், 18 அறைகளைக்கொண்டது. பொதுமக்கள், புதிய பொருள்கள் வாங்கும்போது, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய பொருள்களைக் குப்பையில் வீசி வீணடிக்கின்றனர். சிலர், பழைய பொருள்கள் வாங்குபவர்களிடம் விற்றுவிடுகின்றனர். மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள பொருள்களை, ஏழை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் வகையில், ஏழை மக்களுக்கு உதவ நினைக்கும் பொதுமக்கள், தாங்கள் பயன்படுத்திய புத்தகங்கள், ஆடைகள், விளையாட்டுப் பொம்மைகள் மற்றும் காலணிகள் போன்ற பொருள்களை இந்த ‘அன்புச் சுவர்’ மையத்தில் ஒப்படைத்தால், அவற்றை ஏழை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில், முதன்முறையாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்துக்கு, பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பைப் பொறுத்து, மாநகரின் மற்ற இடங்களில், இந்த மையம் திறக்கப்படும்” என திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

நாம் அந்த இடத்தைப் பார்வையிட்டபோது, அன்புச் சுவரில் பழைய துணிகள், ஆடைகள், காலணிகள் வைக்கப்பட்டிருந்தன. ‘உணவுப்பொருள்களைத் தவிர்க்கவும்' என்றும் ‘தங்களுக்குத் தேவையான பொருள்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும்’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அன்புச் சுவர்

அந்த ஆடைகளில் ஒன்றை தனக்குப் பொருந்துமா என அளவு பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், “கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் வகையில் இந்த இடம் அமைஞ்சிருக்கு. இருக்கிறவர்கள் வீணாகத் தூக்கிப் போடுவதை இங்கே வைப்பதால், என்னைப் போன்ற ஏழைபாழைகளுக்காவது பயன்படும். நல்ல மனசு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சுவர் எடுத்துக்காட்டு” என்றார் மகிழ்ச்சி  பொங்க.

இன்னும் சிலரோ, “இதைப்போல திருச்சிக்குள் பல இடங்களில் தொடங்க வேண்டும். நல்லதை எப்போதும் மக்கள் வரவேற்கவே செய்வார்கள். இந்தச் சுவர் குறித்து இன்னும் மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படவில்லை. இதுகுறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். வசதியாக இருக்கிறவர்கள் தங்களிடம் உள்ள பொருள்களைத் தூக்கி வீசிவிட்டுப் போவதைவிட இதுபோன்ற இடங்களில் கொண்டுவந்து கொடுக்கவே நினைப்பார்கள். இது ஏழை மற்றும் வறுமையில் வாடும் மக்களுக்கானதாக மாற வேண்டும். இதைப் போன்று பல இடங்களில் அன்புச் சுவர்கள் உருவாக வேண்டும்” என்று கோரிக்கைவைத்தனர்.

அன்புச் சுவர், சக மனிதர்கள் மனதைக் கொள்ளைகொள்ளட்டும்!


டிரெண்டிங் @ விகடன்