வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (26/12/2017)

கடைசி தொடர்பு:16:40 (26/12/2017)

இனி தமிழில் தீர்ப்பு வழங்குங்கள்! - நீதிபதிகளுக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த சனிக்கிழமை தமிழகத்துக்கு வந்தார். அப்போது அவர் ராமேஸ்வரத்துக்குச் சென்று ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, சென்னையில் இருக்கும் கவர்னர் மாளிகைக்கு வந்த அவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளைச் சந்தித்துள்ளார். அப்போது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் உடனிருந்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது ராம்நாத் கோவிந்த் நீதிபதிகளிடம், `உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு ஆங்கிலத்தில் மட்டும் இருக்கக் கூடாது. மாநிலத்தில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியிலும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் தங்கள் வழக்கு குறித்து அறிவார்கள்' என்று சொல்லியுள்ளார். 

ராம்நாத் கோவிந்த்

இதை ஆமோதித்துப் பேசிய பன்வாரிலால் புரோஹித், `குடியரசுத் தலைவர் சொன்னதற்கு ஏதுவாக, ஆங்கிலத்தில் இருக்கும் சட்டப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். இதன் மூலம், தீர்ப்பைத் தமிழில் வழங்கும் பணி சுலபமாகக் கூடும்' என்று நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோரின் விருப்பத்துக்கு நீதிபதிகளும் மகிழ்ச்சி தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.