'நோட்டா' குறித்து கவலை தெரிவித்த தமிழிசை!

tamilisai

டந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பணம், ஆளுங்கட்சி பலத்துடன் நின்ற அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், எதிர்கட்சி, தாய்மண் பாசம் என்ற பலத்துடன் நின்ற தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் உள்ளிட்டோர் தோல்வியைத் தழுவியுள்ளனர். 

குறிப்பாக 48,306 வாக்குகள் பெற்று தி.மு.க டெபாசிட் இழந்ததும், பி.ஜே.பி-யைவிட நோட்டா அதிக வாக்குகள் பெற்றதும் மிகப் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. முதல் சுற்றில் இருந்தே அனைத்து எண்ணிக்கையிலும் பி.ஜே.பி-யைவிட நோட்டா முந்திச் சென்றது. இதன் காரணமாக நோட்டா பெற்ற வாக்குகளையும் பி.ஜே.பி பெற்ற வாக்குகளையும் வைத்து சமூக வலைதள வாசிகள் மீம்ஸ் மற்றும் ஸ்டேடஸ் போட்டிருந்தனர். அதுவும் குறிப்பாக பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நோட்டாவைவிட பி.ஜே.பி அதிக வாக்குகள் பெற வேண்டும் என வேண்டுவதுபோல புகைப்படமும் வைரலானது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை சமூக வலைதள வாசிகள் கலாய்த்தவண்ணமே இருந்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பி.ஜே.பி 1,417 வாக்குகளும் நோட்டா 2,373 வாக்குகளும் பெற்றிருந்தன.  

 நோட்டா  குறித்து தமிழிசை டிவிட்

இந்தநிலையில்தான் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 24-ம் தேதி தமது  ட்விட்டர் பதிவில் கவலை தெரிவித்துள்ளார். அவருடைய அந்தப் பதிவில் நோட்டாவுக்குப் போடும் நண்பர்களே வேட்பாளர்களுக்குள் திறமை , நேர்மை உள்ளவர்களை ஆராய்ந்து ஒருவருக்கு வாக்களியுங்கள் நல்ல வேட்பாளர்களைப் புறக்கணிக்கலாமா என்று பதிவிட்டுள்ளார்.  இதன் மூலம் பி.ஜே.பி-யை நோட்டா முந்திச் சென்றது குறித்து கவலைப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!