`எனது சேலம் எனது பெருமை' - சேலம் மாவட்ட வளர்ச்சிக்குப் புதிய திட்டத்தைத் தொடங்கிய ஆட்சியர் ரோகிணி! | `My Salem, My Pride', Collector Rohini starts new initiative for development projects

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (26/12/2017)

கடைசி தொடர்பு:19:50 (26/12/2017)

`எனது சேலம் எனது பெருமை' - சேலம் மாவட்ட வளர்ச்சிக்குப் புதிய திட்டத்தைத் தொடங்கிய ஆட்சியர் ரோகிணி!

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ''எனது சேலம் எனது பெருமை'' என்ற புதிய அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் மாவட்ட வளர்ச்சிக்குப் பாதை வகுத்திருக்கிறார். மத்திய அரசு, மாநில அரசுகள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் இவற்றின் பங்களிப்புகளைப் பெற சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் நிகழ்ச்சியை நடத்தி மாவட்ட வளர்ச்சிக்குப் பெரும் நிதியைத் திரட்டி இருக்கிறார்.

இக்கூட்டத்துக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி, கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் மருதமுத்து மற்றும் பெரு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, `ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி அரசு மட்டும் அல்லாமல் தனியார் பங்களிப்பு இருந்தால் மட்டுமே முழுமையான வளர்ச்சி அடையும். சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசு நலத்திட்ட உதவிகளுக்கான நிதிகள் போதுமானதாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செய்யப்படுவதால் இடைவெளியை நிரப்புவதற்குப் பெரு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புகள் அவசியம் தேவைப்படுகிறது. மாவட்ட வளர்ச்சிக்குத் தனியார்கள் பங்களிக்க விருப்பம் இருப்பதால் இதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் கல்விக்காக வளர்ச்சிக்காக நிதி கொடுக்க விரும்பலாம். சுகாதாரம், பெண்கள் வளர்ச்சி, குழந்தைகள் பாதுகாப்பு, பழங்குடியின மக்களின் வளர்ச்சி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலுக்காகப் பணமாகவோ விழிப்பு உணர்வு செய்ய தன்னார்வலர்களகவோ முன்வரலாம்.

நிதியாகக் கொடுக்க நினைப்பவர்களுக்கு ஏதுவாக `எனது சேலம் எனது பெருமை' என்ற பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்கிறோம். அதில் என்ன செயலுக்காக நிதி வழங்குகிறோம் என்று எழுதி பணத்தைப் போட்டால் அந்தப் பணியை விரைவாகச் செய்து முடிக்கப்படும்' என்று விரிவாக எடுத்துரைத்தார். அதையடுத்து சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா முதன் முதலாக இந்த வங்கிக் கணத்தில் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். அதையடுத்து ஊரக வளர்ச்சித்துறைப் பொறியாளர்கள் சங்கத்தின் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இப்படி பலரும் நிதியை வழங்கினார்கள்.


[X] Close

[X] Close