ஐயப்பனின் மண்டல பூஜை இன்று காலை நடைபெற்றது | Ayappan's Mandala Pooja was held this morning

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (26/12/2017)

கடைசி தொடர்பு:21:30 (26/12/2017)

ஐயப்பனின் மண்டல பூஜை இன்று காலை நடைபெற்றது

பந்தளத்து அரசனாம், பார்புகழும் தேவனாம் ஐயப்பனின் மண்டல பூஜைகள் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜைகளுக்காகக் கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அடுத்தநாள் 16-ம் தேதி முதல் சிறப்பான பூஜைகள் நடைபெற்று வந்தன. தினமும் நடைதிறக்கப்பட்டு நெய்யபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வந்தன. பல லட்சம் பக்தர்கள் கூடி இந்த 40 நாள்களில் ஸ்ரீஐயப்பனை வணங்கி அருள்பெற்றார்கள்.

மண்டல பூஜை

மண்டலபூஜை காலத்தின் இறுதி நாளான 41 வது நாளில் இன்று மண்டலபூஜை நடைபெற்றது. மண்டல பூஜை நடைபெறும் நேரத்தில் ஸ்ரீஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து ஆராதிப்பது வழக்கம். அதன்படி கடந்த 22-ம் தேதி ஆறான்முளாவிலிருந்து தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று மாலை 6.30 மணிக்கு சந்நிதானத்தை வந்தடைந்தது. அங்கியை ஏற்றுக்கொண்ட தேவஸ்தானம், அதை ஐயப்பனுக்கு சார்த்தி, விசேஷ பூஜைகளைச் செய்தனர். நேற்று மாலை தங்க அங்கியில் காட்சி தந்த ஹரிஹரசுதனை அநேக பக்தர்கள் கண்டு தரிசித்தனர். காலை மண்டலபூஜையின் இறுதி நாளான இன்று காலை 11.30 மணியளவில்  கலச அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தங்க அங்கியோடுகூடிய ஐயப்பனின் தரிசனம் பக்தர்களுக்குக்கிட்டியது. 

சபரிமலை ஐயப்பன்

இன்று மண்டல பூஜை முடிந்தவுடன் நடை அடைக்கப்பட்டதால், 41 நாள்கள் மண்டல பூஜை முடிந்தது. பிறகு, வரும் மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30-ம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குப் பூஜை வழிபாட்டுக்கென சுமார் 6 கோடி பக்தர்கள் சந்நிதானத்துக்கு வருவார்கள் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே, அதற்கான பாதுகாப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.