“அந்த ஊழல் பணமெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது!” - ‘பெங்களூரு’ புகழேந்தி | Pugazhenthi says all the lobbied cash is with edappadi palaniswamy

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (26/12/2017)

கடைசி தொடர்பு:18:59 (26/12/2017)

“அந்த ஊழல் பணமெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது!” - ‘பெங்களூரு’ புகழேந்தி

புகழேந்தி

“கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள்  அடிப்படை நோக்கம். டி.டி.வி தினகரன் ஒதுங்கிவிட்டால்  எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் ஒன்று சேர்ந்து இந்தக் கட்சியை எடுத்துக்கொண்டுபோய் டெல்லியின் தெருக்களில் பி.ஜே.பியிடம் அடமானம் வைத்துவிடுவார்கள். ஆர்.கே.நகரில் டி.டி.வி தினகரன் என்கிற ஆளுமை நிற்காமல் போயிருந்தால் நிச்சயம் அ.தி.மு.கவின் நிரந்தர எதிரியான  தி.மு.க வெற்றி பெற்றிருக்கும். இப்படிப் பல அபாயங்களை டி.டி.வி தினகரன் தடுத்திருக்கிறார்” தீர்க்கமாகப் பேசுகிறார் தினகரனின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி.

டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக அதிரடி பேட்டிகளைக் கொடுத்துக்கொண்டிருந்த பெங்களூரு புகழேந்தியை அ.தி.மு.கவை விட்டு நீக்கியிருக்கிறது எடப்பாடி தரப்பு. அம்மாவுக்கு ஜாமீன் கொடுத்த என்னையே கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் என்று ஊடகங்களில் பொங்கியிருக்கிறார் புகழேந்தி. இந்தச் சூழலில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..

நீங்கள் மீடியாவில் பேசும்போதெல்லாம், பெங்களூர்காரருக்கு இங்கே என்ன வேலை என்று சமூகவலைதளங்களில் நிறைய விமர்சனங்கள் வருகின்றனவே. யார் இந்தப் புகழேந்தி?

நான் பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி. எனக்குப் பேர் வெச்சது பெரியார். நான் படிச்சி வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடுதான். என் அப்பா ஆறு முறை மொழிப் போராட்டத்திற்காக சிறைக்குச் சென்றவர். 24-வயதில் கர்நாடகாவிற்குப்போய் செட்டில் ஆகிவிட்டேன். பிறப்பால் தமிழனான நான், அங்க கர்நாடகக்காரனா வாழ்ந்துகிட்டு இருக்கேன். மொழியோ மாநிலமோ எனக்கு வித்தியாசம் இல்லை. புரியாதவர்கள் இதையெல்லாம், சொல்வார்கள் சொல்லட்டும் பரவாயில்லை. ஜெயலலிதாவிற்கு ஷூரிட்டி கொடுத்தது நான்தான். கருணாநிதி கர்நாடகா வரும்போது கறுப்புக் கொடி காண்பித்திருக்கிறேன். அம்மா சிறையில் இருக்கும்போது, ரயில் மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் அம்மாவுக்கும் அ.தி.மு.கவுக்கும் உண்மையானவன். என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இவர்கள் யார்? அம்மாவுக்குத் துரோகம் பண்ணிட்டு இந்த ஆட்சியை வைத்துக்கொள்ளையடிப்பதை என்னல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சிறையில் இருக்கும் சின்னம்மாவுக்கும் டி.டி.வி தினகரனுக்கும் யார் துரோகம் செய்தாலும் பாதுகாவலனாக நான் நிற்பேன்.

சசிகலா மீதும் தினகரன் மீதும் உங்களுக்கு அப்படி என்ன பாசம்?

நீங்கள் கேட்கவரும் கேள்வி புரிகிறது.. (சிரிக்கிறார்) இதுவரைக்கும் சின்னம்மாவிடமோ, டி.டி.வி தினகரனிடமோ அல்லது அவங்க குடும்பத்தைச் சார்ந்த யாரிடமும் நான் எந்த யாசகமும் பெறவில்லை. அவர்களிடமும், அமைச்சர்களிடமும் நான் இதுவரை எந்த உதவியும் பெற்றதில்லை. எனக்குக் கட்சிதான் எல்லாம். மக்கள் ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தார்கள். காரணம், ‘அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது நீதிவிசாரணை வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் போட்ட பொய்க்கூச்சல்தான். ஓ.பி.எஸ்ஸின் பேச்சை நம்பிய பெரும்பாலான மக்களுக்கு அம்மாவின் மரணத்திற்கு சசிகலாதான் காரணமாக இருப்பாரோ. என்ற  ஐயப்பாடு இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் நல்ல மனிதராக இருந்திருந்தால், இரவோடு இரவாக பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சின்னம்மா சொல்லும்போது, அம்மாவின் மரணத்தில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. உண்மை தெரியும்வரை நான் பதவிப் பிரமானம் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று ஓ.பி.எஸ் சொல்லியிருப்பார். அவர் அப்படிச் சொல்லியிருந்தால், இந்தப்  புகழேந்தி அவர் பின்னால் நின்றிருப்பான். ஆனால், அவர் அப்படிச் சொல்லவில்லை அவருக்குப் பதவிதான் முக்கியம். பழனிசாமியும் அப்படிதான். இருவரும் துரோகிகள். மிகப்பெரிய நடிகர்கள். சிவாஜிகணேசன் இருந்திருந்தால் இவர்களிடம் ட்ரைனிங் எடுத்திருப்பார். அந்த அளவுக்கு நடிகர்கள். வெளிவந்த வீடியோ மக்களுக்கு இருந்த எல்லாச் சந்தேகங்களையும் போக்கிவிட்டது. சின்னம்மா மீது படிந்திருந்த பழிகள்  துடைக்கப்பட்டுவிட்டன. அதற்கான சாட்சிதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு.

புகழேந்தி

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்ததால் அவர்மீது பக்கம் பக்கமாகக் குற்றம்சாட்டு வைக்கும் நீங்கள், ஆர்.கே.நகர் வெற்றிக்குப் பிறகு டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்றுக்கொண்டு எங்களோடு இணைந்துவிடுங்கள் என எல்லோரையும்  அழைக்கிறீர்களே. இதை எப்படி எடுத்துக் கொள்வது? 

சின்னம்மா மற்றும் டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்றுக்கொண்டு இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது என்னுடைய சொந்த விருப்பம். நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபோதும், துரோகம் செய்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார்,  உதயகுமார், போன்றவர்கள் இங்கே வருவதால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் இங்கே வருவதை நாங்கள் வரவேற்கவும் இல்லை. குறிப்பிட்ட ஒரு சில அமைச்சர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் தினரனுக்கு எதிராகவோ சின்னம்மாவுக்கு எதிராகவோ பேசவில்லை. ஆகவே எல்லோரையும் ஒதுக்கிவிட முடியாது ஒரு சிலர்தான் பணத்துற்காக அப்படிச் செய்தார்கள். பணம் அவர்கள் கண்களை மறைத்துவிட்டது. சின்னம் டி.டி.வி தினகரன் கைக்கு வந்த பிறகு பாருங்கள். ஊழல் செய்த அமைச்சர்கள் எல்லோரும் ஓரங்கட்டப்படுவார்கள். அந்த இடத்திற்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். பத்துப் பதினைந்து எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

பணமா? யாருடைய  பணம்... யாருடைய கண்களை மறைக்கிறது?

ஓ.பன்னீர்செல்வமும், மைத்ரேயனும் சொன்னது போல பயங்கரமான ஊழல் நடந்திருக்கிறது. அந்த ஊழலைச் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, பணம் அவர்கிட்டதான் இருக்கு. அவரைச் சுற்றியிருக்கிற சில அமைச்சர்களும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.

நீங்கள் சொல்லும் அமைச்சர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு டி.டி.வி தினகரனால் தலைமைக்கு வரமுடியுமா?

ஏன் முடியாது! அதற்கான நாள்கள் வெகு தொலைவில் இல்லை. நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் பாருங்கள். இப்போதே பல எம்.எல்.ஏ-க்கள் எங்களைத் தொடர்புகொள்கிறார்கள். பதவி இல்லையென்றால் இப்போது முக்கியமான அமைச்சர்களாக இருப்பவர்களெல்லாம், முகவரியற்றுப் போய்விடுவார்கள். அதையும் மீறி அவர்கள் எம்.எல்.ஏ-க்களை தக்கவைத்துக்கொள்வார்களென்றால், பொதுத்தேர்தலுக்கு நாங்கள் ரெடி. பொதுத்தேர்தல் வந்தால் அவர்கள் அடியோடு காணாமல் போய்விடுவார்கள்.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தினகரன் என்று கூறியுள்ளீர்கள். எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய திராவிடக் கட்சிகள்தாம் தமிழகத்தை மாறிமாறி ஆளும் என்பதுதான் இதுவரையான அரசியல் வரலாறு. நடுவிலே எப்படியாவது தலையை நுழைத்துவிடலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி போன்ற அடிமைகளை விலைக்கு வாங்கி, அ.தி.மு.கவை அழிக்க முற்படுகிறது பி.ஜே.பி. இந்த  இக்கட்டான சூழலில்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு சிறந்த மீட்பாளராக இந்தக் கட்சியைக் காப்பாற்றியிருக்கிறார் டி.டி.வி தினகரன். அதனுடைய எதிரொலிதான் ஆர்.கே.நகரின் தேர்தல் முடிவு. இனி தினகரன்தான் அ.தி.மு.க. பொறுத்திருந்து பாருங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்