வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (26/12/2017)

கடைசி தொடர்பு:22:45 (26/12/2017)

`கண் விழிக்க முடியாமல் குழந்தைகள் அழுகிறார்கள்' - தொழிற்சாலையால் குமுறும் மக்கள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மண்கரடு பகுதியில் ஶ்ரீராம் மெட்டாலிக் என்ற துணி ஜரிகை தயாரிக்கும் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாடு துறையிடம் அனுமதி பெறாமல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து வெளிவரும் கரும்புகையாலும், கெமிக்கல் திரவத்தாலும் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேலம் கலெக்டரை சந்தித்து ஊர் மக்கள் மனு கொடுத்துள்ளனர்.  

இதைப்பற்றி மண்கரடு பகுதியைச் சேர்ந்த பிரவீன், ''நாங்க இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டன்பட்டியை அடுத்த மண்கரடு பகுதியில் குடியிருக்கிறோம். இப்பகுதியில் துணிகளுக்கு ஜரிகை கலர் ஏற்றும் ஶ்ரீராம் மெட்டாலிக் என்ற தொழிற்சாலை கடந்த ஒரு வருடமாக  செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையால் அப்பகுதியைச் சுற்றியுள்ள பெருமாகவுண்டன்பட்டி, மண்கரடு, கோட்டையான்காடு, அடப்புகாடு, ராமாபுரம் எனப் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இக்கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

இந்தத் தொழிற்சாலைக்கு குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து பேப்பர் ரோல் மாதிரி பிளாஸ்டிக் வருகிறது. அத்தோடு கெமிக்கல் சேர்க்கப்பட்டு தீ மூட்டப்பட்டு துணிகளுக்கான ஜரிகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஜரிகைகள் தயாரிக்கும்போது அந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கரும்புகையாலும் கெமிக்கல் திரவத்தாலும் மிகுந்த அளவு காற்று மாசுபடுவதோடு நிலமும் மாசடைகிறது.
இதனால் மனிதர்களுக்குக் கண் எரிச்சல், மூச்சித் திணறல், தலைவலி போன்ற நோய்கள் வருகின்றன. குழந்தைகள் இந்தப் புகையால் கண் விழிக்க முடியாமல் அழுகிறார்கள். மண் மலட்டுத் தன்மை அடைந்து நச்சாக மாறுகிறது. இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கெமிக்கல் திரவத்தால் சுற்று வட்டாரத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. இந்தத் தொழிற்சாலைக்குத் தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது. ஆனால் இவர் முறைகேடாக இந்தத் தொழிற்சாலையை இயக்குகிறார்.

அதையடுத்து 4 மாதத்திற்கு முன்பு ஊரே திரண்டு போய் அந்தத் தொழிற்சாலையின் முதலாளி ராஜேந்திரனை சந்தித்து பேக்டரியை மூடச் சொன்னோம். அவரும் மூடி விடுவதாகச் சொன்னார். ஆனால், தொடர்ந்து இரவு நேரங்களில் தொழிற்சாலையை இயக்கி வருகிறார். இதனால் யாரும் தூங்கவே முடியவில்லை. அதையடுத்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து பார்த்து விட்டு உடனே அந்தத் தொழிற்சாலைக்கு சீல் வைப்பதாகச் சொல்லியிருக்கிறார் கலெக்டர்'' என்றார் முடிவாக. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க