வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (27/12/2017)

கடைசி தொடர்பு:08:14 (27/12/2017)

மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!

குடும்பச் சொத்தை அபகரிக்க முயற்சி செய்ததைக் கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் குடும்பத்துடன், விஷம் குடித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

தீக்குளிக்க முயற்சி

நெல்லை மாவட்டம் மாறாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர், அசோக்குமார். இவரது மனைவி திவ்ய பிரியதர்ஷினி. இவர்களுக்கு 6 வயதில் கார்த்திகை பிரியா என்ற பெண் குழந்தையும் 4 வயதில், கார்த்திகேயன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திவ்யதர்ஷினியின் தாய்க்கு விபத்து இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும் அவருக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தையும் உறவினர்களே பொய்யான ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக்கொண்டதாகத் தெரிகிறது. 

திவ்ய பிரியதர்ஷினியின் தந்தை மும்பையில் வசித்துவருகிறார். ஆனால், அவர் இறந்து விட்டதாகவும் திவ்ய பிரியதர்ஷினி இறந்து விட்டதாக தாய்மாமாவான கஜேந்திரன் மற்றும் உறவினர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துகொண்டதாக அவர் புகார் தெரிவிக்கிறார். இதுதொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கடந்த இரு வருடங்களாகப் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் மனம் உடைந்த அசோக்குமார் இன்று காலையில் குடும்பத்துடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததை அறிந்த போலீஸார் அவரை பிடித்து எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில், மாலை 5 மணிக்கு மீண்டும் நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்குக் குடும்பத்துடன் வந்த அசோக்குமார், யாரும் எதிர்பாராத வகையில், தன் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணை ஊற்றி தீவைக்க முயற்சி செய்தார். முன்னதாக, குடும்பத்துடன் அனைவரும் விஷம் குடித்தனர். 

அசோக்குமார் குடும்பத்தினர்

விஷம் அருந்தியதுடன், குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் விரைந்து வந்து அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அசோக்குமார் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மீண்டும் அதே போல ஒரு குடும்பம் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.