டிராக்டருக்கு சாலை வரி: பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிக்கும் விவசாயிகள் | Farmers raise voice against tax for tractors

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (27/12/2017)

கடைசி தொடர்பு:07:42 (27/12/2017)

டிராக்டருக்கு சாலை வரி: பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிக்கும் விவசாயிகள்

விவசாய வாகனங்கள் பட்டியலில் இருந்து டிராக்டரை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் டிராக்டர்களுக்கு வரி விதிக்கப்படும். மத்திய அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இதை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்த விவசாயிகள் முடிவெடுத்துள்ளார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே விவசாயம் தொடர்பான அனைத்துப் பொருள்களுக்குமே மத்திய அரசு வரிவிலக்கு அளித்து வருகிறது. உணவு உற்பத்தி என்பது நம் நாட்டின் அத்தியாவசிய தேவை என்பதால், இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டின் முதுகெலும்பாகவும் உயிர் மூச்சாகவும் விளங்கும் விவசாயத்தை வளர்த்தெடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகவும் இருந்து வருகிறது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி, இந்த உயரிய நோக்கத்தை புறந்தள்ளிவிட்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. விவசாயத்தில் டிராக்டரின் பயன்பாடு என்பது மிகவும் அத்தியாவசியமானது. உழவு ஓட்டுவதற்கும் விளைப்பொருள்களைச் சந்தைக்கு கொண்டு செல்லவும் டிராக்டர்களைதான் விவசாயிகள் பயன்படுத்தி வருகிறோம்.

டிராக்டர்களுக்கு ஆண்டுக்கு 16 ஆயிரம் ரூபாய் சாலை வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். ஏற்கெனவே லாபகரமான விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். டிராக்டர்களுக்கு வரி விதித்தால் விவசாய உற்பத்திச் செலவு மேலும் அதிகரிக்கும். டிராக்டர்களை, விவசாயத்தைத் தவிர வேறு எந்த ஒரு பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கும் 2 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, இதை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் மற்ற விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். இதை கைவிடக்கோரி  விவசாயிகள் தங்களது டிராக்டர்களை அரசிடம் ஒப்படைத்துப் போராட்டம் நடத்துவோம்” என்றார்.