வெளியிடப்பட்ட நேரம்: 03:10 (27/12/2017)

கடைசி தொடர்பு:07:38 (27/12/2017)

திருப்பூரில் ஜனவரி 25-ல் வேலை நிறுத்தம்..! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் கொள்கைகளால் நிலைகுலைந்துபோன திருப்பூரின் பின்னலாடைத் தொழிலையும், தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 25-ம் தேதி திருப்பூரில் வேலைநிறுத்தம் நடத்த இருப்பதாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் பனியன் தொழில் மற்றும் தொழிலாளர் நலன் பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது "மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் தொழிலாளர்களும், சிறு, குறு உற்பத்தியாளர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூபாய் 18 ஆயிரத்தை அமல்படுத்தவும், சிறு குறு தொழில்களைப் பாதுகாக்கவும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வரும் ஜனவரி 25-ம் தேதி நாடு தழுவிய அறப்போராட்டம் நடத்துவதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து பின்னலாடைத் துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.