வெளியிடப்பட்ட நேரம்: 03:28 (27/12/2017)

கடைசி தொடர்பு:07:33 (27/12/2017)

'பாதுகாப்பு உபகரணங்களே வழங்குவதில்லை': மறு வாழ்வு ஆணையரிடம் முறையிட்ட துப்புரவுப் பணியாளர்கள்!

சட்டப்படி சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி, கோவை வந்துள்ள தேசிய துப்புரவு மறு வாழ்வு ஆணைய உறுப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் மனு அளித்தனர்.

துப்புரவுப் பணியாளர்கள்
 

தேசிய துப்புரவு மறு வாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹரிமணி கோவை வந்துள்ளார். கோவையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, விஷவாயுத் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கும், டிரைவர், கிளீனர் உட்பட அனைவருக்கும் சட்டப்படி சம்பளம் மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் ஆக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜெகதீஸ் ஹரிமணியிடம், பந்தய சாலையிலுள்ள பயணியர் மாளிகையில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் மனு அளித்தனர்.

அப்போது, "உடல் சுகாதாரம், சொந்த வீடு, வாரிசுதாரர்களுக்கு நல்ல கல்வி கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். மேலும், ஒப்பந்ததாரர்கள் சரியான சம்பளம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நான் பதவியேற்று மூன்று மாதத்தில் கர்நாடக  மாநிலத்தில், 15,000 துப்புரவுப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி கொடுக்கப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணியாளர்கள் ஒய்வு பெறும்போது, அவர்களுடைய பணப்பலன் கிடைக்கும் வகையிலும், இந்தியாவில் 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும். ஈ.எஸ்.ஐ , பி .எஃப், தேசிய துப்புரவு மறு வாழ்வு ஆணையத்தின் மூலமாக அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக" அவர் தெரிவித்தார்.

மேலும், துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு கையுறை, காலுறை மற்றும் சோப்பு உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் மாநகராட்சி நிர்வாகம்  கொடுப்பதில்லை என புகார் கூறினர். இதையடுத்து, துப்புரவுப் பணியாளர்கள் புகார் தொடர்பாக, வருகின்ற ஜனவரி மாதம் ஆய்வுசெய்ய வருவதாக ஜெகதீஸ் உறுதியளித்தார்.