நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி! - கலக்கத்தில் புதுச்சேரி அரசு | Central Government tooks Action in Nomination MLAs case

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (27/12/2017)

கடைசி தொடர்பு:09:20 (27/12/2017)

நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி! - கலக்கத்தில் புதுச்சேரி அரசு

”நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் செல்லும், செல்லாது என முடிவெடுக்கும் அதிகாரம் புதுச்சேரி சபாநாயகருக்கு இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி நியமன எம்.எல்.ஏ மற்றும் வாரியத் தலைவர் பதவிகளை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வந்தது. ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் அதைப் பயன்படுத்திக்கொண்ட மத்திய அரசு புதுச்சேரி சட்டமன்றத்துக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் உள்ளிட்டவர்களை எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது. ஆனால், எம்.எல்.ஏ-க்கள் நியமன விவகாரத்தில் முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறிய சபாநாயகர் வைத்திலிங்கம் அந்த மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். அதையடுத்து, ஆளுநர் மாளிகையில் அந்த மூன்று பேருக்கும் ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்து பரபரப்பை கூட்டினார் கிரண்பேடி.

புதுச்சேரி

இதற்கிடையில், மத்திய உள்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் முதல்வரின் பாராளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன். ஆளுநரின் பதவிப் பிரமாணச் சான்று மற்றும் அரசிதழில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் தங்களுக்கு இருக்கைகள் ஒதுக்குமாறு மீண்டும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டார் அவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் இரண்டொரு நாளில் தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில்தான், புதுச்சேரி செயலர் வின்சென்ட்ராயர் மற்றும் உள்ளாட்சித்துறைச் செயலர் ஜவகர் ஆகியோருக்கு புதுச்சேரி அரசின் சார்பு செயலர் கண்ணன் அனுப்பிய கடிதம் அனல் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசின் கடிதத்தை மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ’மத்திய உள்துறை அமைச்சகம் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி உள்ளிட்டவர்களை எம்.எல்.ஏ-க்களாக நியமித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டுள்ளது. 1963 புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பிரிவு 3 மற்றும் உட்பிரிவு 3-ன் கீழ் மேற்கண்ட மூன்று பேரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

நியமன எம்.எல்.ஏ

அந்தப் பதவிப் பிரமாணத்தில் சட்ட விதிகளின்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டிருக்கிறது. நியமன எம்.எல்.ஏ-க்கள் குறித்து முடிவெடுக்கவும், கேள்வி எழுப்பவும் மற்றும் தகுதி நீக்கம் செய்வதற்கு யூனியன் பிரதேச சட்டம் பிரிவு 14(3) குடியரசுத் தலைவருக்கே அதிகாரத்தை வழங்கியுள்ளது. அவரின் முடிவுதான் அதில் இறுதியானது. மத்திய அரசின் நியமன உத்தரவை செல்லும், செல்லாது என முடிவெடுக்க யூனியன் பிரதேசத்தின் சபாநாயருக்கு அதிகாரமில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றமும் இதுவரை எந்தத் தடையையும் விதிக்கவில்லை. அதனடிப்படையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளம், படி உள்ளிட்ட சலுகைகளை  செய்து தருவதோடு உடனடியாக அதுகுறித்த அறிக்கையையும் தர வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க