இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்! | Sasikumar murder case - accused produced at coimbatore court

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (27/12/2017)

கடைசி தொடர்பு:11:40 (27/12/2017)

இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்து முன்னணி சசிக்குமார் கொலைக் குற்றவாளி முபாரக்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி முபாரக் இன்று கோவை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு கோவை சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர்  22-ம் தேதி, கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் சுப்ரமணிய பாளையம் பகுதியில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 8 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கொலையாளிகள் தொடர்பாக எந்தத் தகவலும்  கிடைக்காததை அடுத்து செப்டம்பர் 27-ம் தேதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி- க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் மற்றும் முபாரக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ளார். மேலும், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சதாம் மற்றும் சபையர் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முபாரக் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் நேற்று பொள்ளாச்சியில் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட முபாரக் இன்று கோவை இரண்டாவது கூடுதல் மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேலும், முபாரக்கை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட முபாரக்கை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க