`சோகமும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது' - நிவாரணத்துக்காக காத்திருக்கும் மீனவர்கள்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன் புயலில் உயிரிழந்த மீனவர்கள் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) கோரிக்கை விடுத்துள்ளது.

ஒகி புயலில் காணாமல் போனவர்களை மீட்க கோரி போராட்டம்

இதுதொடர்பாக அந்த சங்க நிர்வாகிகள் செலஸ்டின், சி.ஆர்.செந்தில்வேல் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், ''மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற குமரி மாவட்ட மீனவர்களில் ஏராளமானோர் ஒகி புயலில் சிக்கி இன்னும் கரை திரும்பவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகை நாள்களில் கரை திரும்புவார்கள் என்று கடற்கரையிலேயே காத்திருந்த மீனவக் குடும்பங்களுக்கு ஏற்பட்ட சோகமும் ஏமாற்றமும் வார்த்தையில் கூறமுடியாது. நீரோடி, மார்தாண்டம்துறை, சின்னதுறை, இறவிபுத்தன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

இறந்து போன மீனவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விவரங்களை முழுமையாக வெளியிடாமல் அரசு அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒகி புயலின் பாதிப்புகள்குறித்து ஆய்வுசெய்ய  இம்மாதம் கடைசியில் மத்திய குழு வருகை தரும் நிலையில், இதுகுறித்து அரசு முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும். புயல் பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்க ரூ.8,426 கோடி நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தனர். அத்துடன் ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தனர். ஆனால், மத்திய அமைச்சர் எவ்வித உத்தரவாதமும் வழங்கவில்லை. மேலும், புயல் பாதித்து ஒரு மாதம் காலம் ஆகிவிட்டது. தற்போதுதான் மத்திய குழு வருகை உறுதி செய்யபட்டுள்ளது.

ஒகி புயலில் சிக்கி கரை மீண்டவர்கள் 

தமிழகத்துக்கு வருகை தரும் மத்தியக் குழு பாதிக்கப்பட்ட மீனவக் கிராமங்கள் மற்றும்  கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ள  விவசாய பகுதிகளை முழுமையாக ஆய்வுசெய்து சரியான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக ஒகி புயல் வீசிய நாள் முதலாக மீட்புப் பணியும், புயலுக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளும், ஆமை வேகத்துக்கும் குறைவான வேகத்தில் நடைபெற்றுவருகிறது. கன்னியாகுமரியிலிருந்து கடலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்களின் நிலை தற்போது வரை என்ன ஆனது என்று தெரியாத நிலையில் உள்ளதாகவும், கேரளா மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புயலின் பாதிப்புகுறித்து குமரி மாவட்டத்துக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் பணி தொடரும் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் மத்திய, மாநில அரசுகள் பெயரளவுக்கு தேடிய மீட்பு நடவடிக்கையை  கடந்த சில தினங்களாக குறைத்து வருகின்றனர். அத்துடன் ஒகி புயலைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இன்னும் இயல்பு நிலை திரும்ப எவ்வளவு நாள்கள் ஆகும் என்று தெரியவில்லை. அதேபோல பிழைப்புக்காக மேற்கு கடற்கரை மாநிலங்களுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் அனைவரும் ஒகி புயல் காரணமாக தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தொழில் இல்லாமல் உள்ளனர்.

ஒகி புயலில் உயிரிழந்தவர்கள் 

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழக கடற்கரை பகுதிகள் முழுவதும் கடுமையான சோகமும், பஞ்சமும் தலைவிரித்து ஆடுகிறது. எனவே, மத்திய- மாநில அரசுகள் தாங்கள் அறிவித்துள்ள அடிப்படையில் கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் பணி தொடர வேண்டும். மத்திய குழு ஆய்வுக்குப் பிறகு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைச் செய்ய தமிழக அரசு சார்பில் கேட்டுள்ள நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும். தொழில் பாதிப்பு ஏற்பட்ட மீனவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கிய நிவாரண நிதியை உயர்த்துவதுடன், அதனை தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களுக்கும் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றங்கள்,  தற்போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ள ஒகி புயல், இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களிலிருந்து மீனவர்களை மற்றும் கடலோர மக்களைக் காப்பாற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதியை தமிழக அரசின் சார்பில் மத்திய குழுவிடம் கோரிக்கை வைக்கவேண்டும். மேலும், ஓகி புயலால் பாதிக்கப்பட்டு இறந்து போன மீனவர்கள் உள்ளிட்ட அனைவரின் நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தமிழக அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்'' என கோரியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!