சம்பளத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் குறைப்பு! போராட்டத்தில் குதித்த 20 ஆயிரம் தொழிலாளர்கள்

திண்டுக்கல் பகுதியில் நாகல்நகர், பாரதிபுரம், சௌராஷ்டிராகாலனி, நாகல்புதூர் ஆகிய பகுதிகளில் நெசவுப் பணி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் மட்டும் சுமார் ஏழாயிரம் தறிகள் இயங்குகின்றன. நெசவுப் பணிகளில் இருபதாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக நெசவுத்தொழில் இருக்கிறது. சமீபகாலமாக திண்டுக்கல் பகுதிகளில் தயாராகும் சேலைகளில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வேலைபாடுகளைச் செய்கிறார்கள். வழக்கமாக சேலைகளுக்கு ஒன்றரை இஞ்ச் பார்டர் வைப்பார்கள். ஆனால், தற்போது ஐந்து இஞ்ச் அளவுக்கு பார்டர் வைத்து, அதில் எம்பிராய்டரி வேலைகளும் செய்கிறார்கள். பார்டர் அமைக்க ஐந்து நிறங்களில் நூல் பிரித்து கட்டுவது கொஞ்சம் சிரமமான பணி. இதனால் இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சிரமக்கூலி என்ற பெயரில் வழக்கமான கூலியுடன் கூடுதல் கூலி வழங்கப்பட்டது.

நெசவாளர்கள் வேலைநிறுத்தம்

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி, அரசுப் பட்டியலில் அறிவிக்கப்பட்டபடிதான் இனி கூலி வழங்கப்படும் என தறி உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் தங்கள் வழக்கமான கூலியில் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் மூன்றாயிரம் ரூபாய் வரை குறைவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக தறி உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சுமார் இருபதாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இருப்பதால், இந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக தறிகள் இயங்கவில்லை. பொங்கல் பண்டிகை வரும் நேரத்தில் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதும் தறி உரிமையாளர்கள், தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!