`இவர் இருக்கும்வரை தி.மு.க வெற்றிபெறாது' - ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி கொந்தளிப்பு | M.K.Alagiri Slams M.K.Stalin after DMK lost in RK Nagar election

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (27/12/2017)

கடைசி தொடர்பு:12:32 (27/12/2017)

`இவர் இருக்கும்வரை தி.மு.க வெற்றிபெறாது' - ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி கொந்தளிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க படுதோல்வியடைந்ததுகுறித்து கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் மு.க.அழகிரி.

தி.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குன்றியதால் தி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அவ்வப்போது, கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துவருகிறார் அழகிரி. ஆனால், அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அவர் தவிர்த்துவந்தார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அபார வெற்றி பெற்றார். ஆனால், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தி.மு.க டெபாசிட் இழந்தது. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தும் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது, தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனிடையே, தி.மு.க முதன்மை நிலையச் செயலாளர் துரைமுருகன், ஆர்.கே.நகரில் தி.மு.க-வினர் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

துரைமுருகனின் இந்த குற்றச்சாட்டுக்கு அதிரடியாக பதில் அளித்த மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, "தி.மு.க.வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க.வின் முதன்மை நிலையச் செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவதுபோல் உள்ளது. தலைமை என்ன செய்யப் போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள். முருகனுக்கு அரோகரா!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் தி.மு.க படுதோல்வியை சந்தித்ததுக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளார் மு.க.அழகிரி. தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தி.மு.க தோற்றது ஏன்? டெபாசிட் இழக்கிற அளவுக்கு தி.மு.க இருக்கிறது என்றால் ஸ்டாலின் என்ன செயல்படுகிறார்? வெறுமனே வேனில் ஏறி நின்றபடி வாக்குகேட்டால் வெற்றி கிடைக்காது. செயல் தலைவராக ஸ்டாலின் பதவி வகிக்கும் வரை எதுவும் சரியாக நடக்காது. தி.மு.க செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை கட்சி வெற்றி பெறாது. வெற்றிப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் தி.மு.க-வில் மாற்றம் தேவை. தி.மு.க-வினரை பணத்துக்காக விலைபோனதாகக் கூறலாமா? தி.மு.க-வினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டதாக துரைமுருகன் கூறியது தவறு. களப்பணி செய்தால்தான் தி.மு.க தேர்தலில் ஜெயிக்க முடியும். தினகரன் தொடக்கம் முதலே களப்பணி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். இரட்டை இலை, உதயசூரியன் தோற்கும் அளவுக்கு தினகரன் களப்பணி செய்திருக்கிறார்.

கருணாநிதியைப் போன்று களப்பணி செய்தால்தான் தேர்தலில் தி.மு.க ஜெயிக்க முடியும். ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை. துரோகிகள்,  புதிதாக வந்தவர்களுக்குப் பதவி கொடுப்பதை நிறுத்தினால்தான் தி.மு.க முன்னேறும். நிர்வாகப் பொறுப்பில் கருணாநிதி இருந்தவரை தேர்தல்களில் தி.மு.க ஜெயித்தது. அ.தி.மு.க, திமுக மீது வெறுப்பு இருந்ததால்தான் டி.டி.வியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையைத்தான் தேர்தலில் செலவு செய்ய முடியும். பணம் இருந்தால் மட்டும் தேர்தலில் ஜெயிக்க முடியாது உழைப்பும் தேவை" என்று கூறினார்.