வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (27/12/2017)

கடைசி தொடர்பு:13:35 (27/12/2017)

‘உங்களைக் காலி செய்துவிடுவார் மோடி’ என்றார் குருமூர்த்தி! - வெளிச்சத்துக்கு வருகிறதா வில்லங்க வீடியோ?

ஆடிட்டர் குருமூர்த்தி

‘திறனற்றவர்கள்' என ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய வார்த்தைகளை வைத்துக் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். 'அவர் படித்த முட்டாள்' என அமைச்சர் ஜெயக்குமார் கூற, 'திறனற்றவர்கள் என நான் கூறிய வார்த்தை வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிட்டது' என விளக்கம் கொடுத்திருக்கிறார் குருமூர்த்தி. 'ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு வலுவாகக் கால் ஊன்ற நினைத்த பா.ஜ.கவுக்கு தினகரனின் வெற்றி கூடுதல் கோபத்தை வரவழைத்திருக்கிறது. அதைத்தான் வேறு வடிவில் வெளிப்படுத்துகிறார் குருமூர்த்தி' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தேசிய இணை அமைப்பாளராகப் பதவி வகிக்கும் குருமூர்த்தி, பண்பாடு, கலாசாரம் குறித்து பயிற்சி வகுப்புகளை எடுப்பதில் வல்லவர். அப்படிப்பட்டவர் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட செய்தி ஒன்று, அவரது பண்பாட்டையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது. அவரது விமர்சனத்துக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், 'குருமூர்த்திக்கு முகமே கிடையாது. மற்றவர்களை விமர்சனம் செய்வதற்காக தடித்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தக் கூடாது. அவரது விமர்சனத்துக்கு நாங்கள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தன்மானத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அவர் கூறிய வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' எனக் கொதித்தார்.

அரசியல் களத்திலும் குருமூர்த்தியின் வார்த்தைகளுக்குக் கடுமையான விமர்சனம் எழுந்தது. இதற்குப் பதில் அளித்த குருமூர்த்தி, 'நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப்பேச்சுக்கு நான் பதில் தெரு பேச்சில் ஈடுபட்டால்தான் அவர் கூறிய பட்டத்துக்கு ஏற்றவனாவேன். இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்றபடி, அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல்ரீதியாக அவர்கள் impotentதான்' எனக் கொந்தளிப்பை அதிகப்படுத்தினார்.

பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு குருமூர்த்தியின் மறைமுக செயல்பாடுகள் குறித்து நம்மிடம் விவரித்தார் அரசியல் விமர்சகர் ஒருவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தால் அதிகப்படியான லாபம் அடைந்தது பா.ஜ.கதான். உதய் மின்திட்டம், ஜி.எஸ்.டி என எதையெல்லாம் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தாரோ, அதையெல்லாம் எளிதாக நிறைவேற்றுவதற்கு பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்த அன்று பேட்டியளித்த அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலகின் தலைசிறந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையும் தாண்டி எதிர்பாராதவிதமாக அவர் மரணமடைந்துவிட்டார். அவரது மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர் இறந்தாலும் சர்ச்சை எழுவதில்லை. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு தலைவர் இறந்தால் அது சர்ச்சையாக்கப்படுகிறது' எனப் பேட்டியளித்தார். ஆனால், அடுத்து வந்த நாள்களில், 'அம்மா மரணத்தில் மர்மம்; நாங்கள் யாரும் மருத்துவமனையில் அவரைப் பார்க்கவில்லை' என ஜெயலலிதா சமாதியில் தியானத்தை முடித்த பிறகு பேசினார் ஓ.பன்னீர்செல்வம். 'அம்மா மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் தேவை' என தர்மயுத்தத்துக்குக் கிளம்பினார் பன்னீர்செல்வம். இந்த தர்மயுத்தத்துக்கு விதை போட்டவர் ஆடிட்டர் குருமூர்த்தி. 

'சசிகலா குடும்பம் நெருக்குதல் கொடுத்தாலும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம்' எனப் பலமுறை வலியுறுத்தியும், அவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததில் குருமூர்த்திக்கு உடன்பாடில்லை. அவரது ராஜினாமாவை ஊட்டியில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாகப் பெற்றுக் கொண்டதும் இதனால்தான். அதனால்தான் பன்னீர்செல்வத்தை சில காலம் காக்க வைத்தனர் பா.ஜ.க நிர்வாகிகள். எடப்பாடி பழனிசாமி லைம் லைட்டுக்கு வந்ததும் அமைச்சர்கள் சிலர் குருமூர்த்தியிடம் ஆலோசனை பெறத் தொடங்கினர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதில் பா.ஜ.க தலைமைக்கு உடன்பாடில்லை. இதைப் பற்றி நேரடியாகக் கூறியும் தினகரன் விட்டுக் கொடுக்கவில்லை. இதையடுத்து, ஆர்.கே.நகரில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் சிக்கின. இதை வைத்துக்கொண்டே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களை பா.ஜ.க தலைமை நெருக்கத் தொடங்கியது. 'விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என்ற கோரிக்கையோடு போயஸ் கார்டனில் தினகரனை சந்தித்தனர் கொங்கு அமைச்சர்கள் சிலர். இந்த சந்திப்பு மிகப் பெரும் மோதலாக உருவெடுத்தது. தினகரனையே கட்சிவிட்டு நீக்கி வைக்கும் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார்.

மோடி-எடப்பாடி பழனிசாமி

‘அமைச்சர்கள் எதற்கோ பயந்துகொண்டு இவ்வாறு செய்கிறார்கள்' என தினகரன் பேட்டியளித்தாலும், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு, ஃபெரா வழக்குகள் என அவரைத் தூங்க விடாமல் செய்தது பா.ஜ.க அரசு. இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் ஆடிட்டர் குருமூர்த்தி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் பலர் ஆடிட்டரிடம் அடிக்கடி ஆலோசனை பெறத் தொடங்கினர். ‘அடுத்து என்ன செய்ய வேண்டும்?' என அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர் ஆடிட்டரிடம் கேட்டபோது, 'அந்தக் குடும்பத்தை ஒதுக்கி வையுங்கள். அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இதையும் மீறி தொடர்ந்தால் மோடி உங்களைக் காலி செய்துவிடுவார்' என நேரடியாகவே கூறியிருக்கிறார். இதனால்தான், திறனற்றவர்கள் என குருமூர்த்தி விமர்சித்தபோது பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான அ.தி.மு.க ஐ.டி விங்க் நிர்வாகி பிரசாத், 'அமைச்சர்களோடு நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தை வீடியோ இருக்கிறது' என அதிர வைத்தார். ஒருகட்டத்தில் குருமூர்த்தியிடம் கலந்தாலோசிப்பதை பா.ஜ.க நிர்வாகிகள் நிறுத்திவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தநேரத்தில் குருமூர்த்தி கொதிப்பதற்கு ஒரே காரணம்தான் இருக்கிறது. ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றியை குருமூர்த்தியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 'ஆட்சி இருந்தும் ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் தோற்றுவிட்டார்கள்' என்ற கோபத்தைத்தான் பகிரங்கமாக வெளிக்காட்டியிருக்கிறார். அரசியல் தளத்தில் விமர்சகர்களாக இருப்பவர்கள் குறைந்தபட்ச நாகரிகத்தையாவது வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள். குருமூர்த்தியின் விமர்சனம் எல்லை மீறியது" என்றார் விரிவாக. 

“துக்ளக் ஆசியராக இருந்த சோவைப் போல, அரசியல் சாணக்கியனாக வர வேண்டும் என்பதுதான் குருமூர்த்தியின் நோக்கம். இதற்காக சிலமுறை அவர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியிருக்கிறார். 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றிவாகை சூடினார் கருணாநிதி. 'ஆட்சி முடிந்து 2011-ல் பொதுத் தேர்தல் வந்தாலும் கருணாநிதியே வெல்வார்' என்ற கருத்து அப்போது நிலவியது. இதையடுத்து, தி.மு.கவை எதிர்கொள்வது குறித்து அரசியல் வல்லுநர்களிடம் கருத்து கேட்டார் ஜெயலலிதா. பத்திரிகையாளர் சோ ஏற்பாட்டின்பேரில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் குருமூர்த்தி. தேர்தல் தொடர்பாக குருமூர்த்தி கூறிய சில கருத்துகளை சசிகலா ஏற்றுக்கொண்டார். ஆனால், அவரது எந்தக் கருத்தையும் ஜெயலலிதா ஏற்கவில்லை.

‘தி.மு.கவை எதிர்கொள்வதில் எங்களுக்கு இருக்கும் ஒரே பிரச்னை திருமங்கலம் ஃபார்முலாதான். அதை எதிர்கொள்வது குறித்து ஏதாவது கூற முடியுமா?' எனக் கேட்டார் ஜெயலலிதா. இதற்கு குருமூர்த்தி கூறிய ஆலோசனைகளைக் கேட்ட ஜெயலலிதா, ‘தேர்தலில் வெற்றியடைய இது பயன்படாது' எனக் கூறி அனுப்பிவிட்டார். இதை குருமூர்த்தியே துக்ளக் இதழில் பதிவு செய்திருக்கிறார். சசிகலா குடும்பத்தின் காங்கிரஸ் தொடர்பு, தமிழ் அமைப்புகளுடன் நடராசனுக்கு உள்ள தொடர்பு, காமராஜரை சசிகலா குடும்பம் இருட்டடிப்பு செய்வது குறித்து மோடியின் குஜராத் டீமில் உள்ள தமிழர் ஒருவரின் ஆதங்கம் என அனைத்துக் காரணிகளும் சசிகலா குடும்பத்துக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு அணிவகுத்தன. ஒருகட்டத்தில், 'கர்மவீரர் காமராஜர்ஜி' என மேடையில் மோடி பேசும் அளவுக்குச் சென்றது. அரசியல் அதிகாரத்தில் புறக்கணிப்பட்ட பெரும்பான்மை, மொழிவழி சிறுபான்மை ஆகிய சமூகங்களை ஒன்றிணைத்து அரசியல்ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் திட்டம். இந்தத் திட்டத்தில் மண் அள்ளிப் போடும்விதமாக தினகரன் வெற்றி அமைந்துவிட்டதை பா.ஜ.கவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்கிறார் அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர். 

ஆடிட்டர் குருமூர்த்தி மீதான விமர்சனம் குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி, “அரசியலில் மிக நாணயமான மனிதர்களில் ஆடிட்டரும் ஒருவர். அதிகாரத்தில் காமராஜர் இல்லாத காலகட்டங்களில் அவருடன் மிக நெருக்கமாக இருந்தவர். அவசரநிலைக் காலகட்டத்தில் சிறைக்குச் சென்றவர். அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராக அவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். அவர் கூறிய வார்த்தைகளுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமாரும் அப்படியொரு விமர்சனத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை" என்றார். 

அரசியல் களத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்த பா.ஜ.கவுக்கு தினகரனின் வெற்றி கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘புதிய எதிரி தினகரன்’ என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ‘மீண்டும் இடைத்தேர்தல் வராமல் தினகரன் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுவதும் அரசியல் பார்வையாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்