’போட்டோ எடுக்க வரவில்லை.. கடவுளைப் பார்க்க வந்தேன்!’ - ரஜினியை மிரள வைத்த ரசிகர்

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். நேற்றுத் தொடங்கிய இந்தச் சந்திப்பு இன்னும் 5 நாள்களுக்கு நடக்கிறது. 

ரஜினி ஃபேன்
 

இன்றைய சந்திப்பின்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ரஜினி அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். சிலர் ரஜினியின் காலில் விழுந்துவிட்டு பின்னர் போட்டோ எடுத்துக்கொண்டனர். ஆனால், ஒரு ரசிகர் மட்டும் ரஜினியின் அருகில் நின்று கடவுளை வணங்கிவிட்டு போட்டோ வேண்டாம் என்று கூறி ரஜினியைப் பார்த்துக்கொண்டிருந்தாராம். சபையில் இருந்தவர்கள் ’போட்டோ எடுத்துக்கோ’ என்று கூச்சல் எழுப்பினர். ஆனாலும், அவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் ரஜினியையே பார்த்துக்கொண்டு நின்றாராம். `நான் கடவுளைதான் பார்க்க வந்தேன். போட்டோ எடுக்க வரவில்லை’ என்று கூறி 3 நிமிடம் அங்கே நின்றாராம்.

ரஜினிகாந்த்
 

விசாரித்ததில் அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்று தெரிந்தது. குணசேகரைத் தொடர்புகொண்டு பேசினோம்...

"9 வயசிலிருந்தே எனக்கு ரஜினியைப் பிடிக்கும். மாவீரன், மனிதன் படங்கள் பார்த்த பிறகுதான் அவரோட நடிப்புத் திறமைமேல தனி மரியாதை வந்துச்சு. அண்ணாமலை படத்துக்குப் பிறகு, ரசிகர் மன்றம் வெச்சோம். அப்படியே அவர் மேல இருக்க மரியாதை பாசமா மாறுச்சு. அவர் இப்போ எனக்கு கடவுள் மாதிரி. நான் இயக்குநர் ஷங்கரின் கார் டிரைவர். ரஜினி சாரோட நிறைய தடவ படப்பிடிப்பில் இருந்திருக்கேன். ஆனா ஒருதடவக்கூட அவரிடம் போய், நான் உங்க ரசிகர், உங்ககூட போட்டோ எடுத்துக்கணும் அப்படின்னு சொன்னது கிடையாது. காரணம் அவரோட ரசிகரா அவர சந்திக்கணும்னு எனக்குள்ள வைராக்கியம். அதனாலதான் இந்த ரசிகர்கள் உடனான சந்திப்பில் கலந்துகிட்டது. அவர் பக்கத்துல ரசிகரா போய் நிக்கணும்னு மட்டும்தான் ஆசை. போட்டோ புடிக்கணும்னு ஆசை கிடையாது. அவர் எனக்கு கடவுள். அவர் பக்கத்துல ஒரு சில நொடி அவரோட ரசிகரா நின்னேன். அதுவே போதும். அவர் அரசியலுக்கு வரணும். மக்களைக் காப்பாத்தணும். இதுதான் என்னோட ஆசை” என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!