'நான் இங்கு இருப்பது முறையல்ல'- ராமதாஸிடம் கொதித்த டாக்டர் செந்தில் | Clash at PMK board meeting

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (27/12/2017)

கடைசி தொடர்பு:14:15 (27/12/2017)

'நான் இங்கு இருப்பது முறையல்ல'- ராமதாஸிடம் கொதித்த டாக்டர் செந்தில்

பா.ம.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்திலின் 2ஜி அலைவரிசை குறித்த ஃபேஸ்புக் பதிவை பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதை அப்போதே விகடன் டாட்.காமில் செய்தி வெளியிட்டு இருந்தோம். 

கடந்த டிசம்பவர் 25-ம் தேதி தர்மபுரி அடுத்துள்ள குண்டல்பட்டி டி.என்.ஜி விடுதியில் தர்மபுரி மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ராமதாஸ், தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் தன்ராஜ், பா.ம.க துணைப் பொதுச்செயலாளர் வேங்கடேசன், டாக்டர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் பா.ம.க பலம் பலவீனம் பற்றி ஆலோசனை செய்துள்ளனர். 

பாமக கூட்டம்

அப்போது, எழுந்த துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேசன் விகடன் டாட்.காம் செய்தியை எடுத்துக்கொண்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இதைத் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 2ஜி வழக்கு குறித்து ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், டாக்டர் செந்தில் நமது கட்சியில் முக்கியமான நபர். அவர் ஃபேஸ்புக் பதிவு விகடன் இணையதளத்தில் வந்துள்ளது. அவரின் கருத்தை கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், செய்தியாளர்கள் மத்தியிலும் பெரிய அளவுக்கு விவாதிக்கப்பட்டு வருகின்றது. தர்மபுரி மாவட்ட முதன்மை நிர்வாகி என்ற முறையில் பதில் அளிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கவே வேங்கடேசனிடம், செந்தில் டாக்டரின் பதிவை படிக்கும்படி தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் தன்ராஜ் கேட்கின்றார். வேங்கடேசன் படிக்கின்றார். அதில் எளியக் குடும்பத்தில் பிறந்த, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் ஒரு வழக்கைத் துணிவுடன் எதிர்கொண்டு, ஒரே ஒருமுறைகூட வாய்தா வாங்காமல் தொடர்ந்து உறுதியான கருத்துகளைப் பேசி, ஒரு புன்னகையோடு வழக்கைச் சந்தித்து வெற்றி கண்டதையும் நான் மகிழ்ச்சியோடு தான் பார்க்கிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை படிக்கும்படி கூறுகின்றார். அப்படி என்றால் டாக்டர் செந்தில் என்ன சொல்ல வருகின்றார் என்று தன்ராஜ் கேள்வி எழுப்புகின்றார்.

ஒரு கட்டத்தில் கடுமையான மனஅழுத்தத்துக்கு வந்த டாக்டர் செந்தில், இந்த நிர்வாகக் குழு கூட்டம் என்னைப் பற்றி விவாதிக்கத்தான் என்றால் நான் இங்கு இருப்பது முறையல்ல என்று நிர்வாகக் குழு கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பினார். பிறகு நிர்வாகக் குழு கூட்டத்தில் விமர்னங்கள் எழுந்துள்ளது. கட்சியை விட்டு நீக்குமாறு பலர் கேட்டுள்ளனர். இதை எல்லாம் மிக அமைதியாகக் கவனித்த ராமதாஸ், நிர்வாகக் குழு கூட்டத்தை முடித்துவிட்டுச் சென்றுள்ளார். 

''நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க தர்மபுரியில் தயாராகி வரும் நிலையில் இப்படியொரு சிக்கல் உருவாகுவது நல்லது இல்லை'' என்று மூத்த பா.ம.க நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், செந்தில் மீண்டும் மிக வருத்தமாக தனது ஃபேஸ்புக் பதிவில், ''நீ நிரூபித்துக்கொண்டே இரு நிரபராதி என்று. குற்றமற்றவன் என்று. குடிகாரனில்லை என்று. ஒரு அடிமை  என்று. அன்பானவன் என்று. நல்லவன் என்று. ஒழுக்கமானவன் என்று. நல்ல மகன் என்று. நல்ல அண்ணன் என்று. நல்ல கணவன் என்று. நல்ல காதலன் என்று. நல்ல தந்தை என்று. சிறந்த வேலைக்காரன் என்று. சிறந்த நண்பனெனச் சலிப்பாய் இருக்கிறது கொன்று விடுங்கள் என்னை" என்ற அவரின் பதிவு மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இதற்கும் தர்மபுரி பா.ம.க தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.