வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (27/12/2017)

கடைசி தொடர்பு:14:50 (27/12/2017)

கிலோ 90 ரூபாய் விற்ற தக்காளி இன்று 5 ரூபாய்! விலை வீழ்ச்சியைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.90 வரை விலை எகிறி தங்கமாகப் பார்க்கப்பட்ட தக்காளி இப்போது கிலோ 5 ரூபாய்க்கு கேட்க ஆளின்றி போய்விட்டது.

தமிழ்நாட்டில் ஒட்டன்சத்திரம் மற்றும் கிணத்துக்கடவு அடுத்துள்ள நாச்சிப்பாளையம் இரண்டும்தான் தக்காளிக்கு பேர்போன சந்தைகள். பல ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் இப்பகுதியில் தக்காளி நடவு செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தாண்டவமாடியதால், நடவு செய்த தக்காளி செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டன. நிலத்தடி நீரமட்டமும் வெகுவாக குறைந்து போனதால், வாடிய தக்காளிப்பயிருக்கு தண்ணீர் பாசனம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து தக்காளி லோடுகளை வரவழைத்தனர் மொத்த வியாபாரிகள். இந்த ஆண்டு அப்படியில்லை... போதிய பருவமழை கிடைத்து கிணறுகளில் தண்ணீர் தளும்பிக்கிடப்பதால்... பல ஆயிரம் ஏக்கரில் வீரிய ரக தக்காளி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர் விவசாயிகள்.

''ஏக்கருக்கு 40 டன் வரை மகசூல் கொடுக்கும் இந்த ரகம் அமோக விளைச்சலை கொடுக்கக் கூடியது. மேலும், கேரள மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு 90 லோடு வரை தக்காளி அனுப்புவது வழக்கம். ஓணம் பண்டிகைக்குப் பிறகு அங்கு தக்காளி நுகர்வு குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில் மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்க அந்த மாநில அரசு ஊக்கம் கொடுத்துவருகிறது. அதனால் அங்குள்ள அநேக வீடுகளில் காய்கறித்தோட்டம் அமைத்து தங்கள் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்கின்றனர். இதனால் வரும் காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து காய்கறிகள் வாங்கும்தேவை 70 சதவிகிதம் குறைந்து விடும்'' என்கிறார்கள்.

அதேபோல் ஏற்பட்டுள்ள தக்காளி விலை வீழ்ச்சியை தடுக்க, தக்காளி அதிகம் விளையும் பகுதிகளில் குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.  ஜாம், ஊறுகாய், ஜுஸ், கூழ் போன்ற மதிப்புக்கூட்டல் பொருள்களைத் தயாரிக்கும் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதாக இருக்கிறது தக்காளி விவசாயிகள் பலரின் கோரிக்கை.