தினகரனின் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள் யார்? யார்? - பட்டியல் போடும் பன்னீர்செல்வம், பழனிசாமி | Who are all Dinakaran supporters, Edappadi and paneerselvam lists out

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (27/12/2017)

கடைசி தொடர்பு:20:29 (27/12/2017)

தினகரனின் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள் யார்? யார்? - பட்டியல் போடும் பன்னீர்செல்வம், பழனிசாமி

தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. கட்சிக்குத் துரோகம் செய்தவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுவருவதால் சம்பந்தப்பட்டவர்கள் கலக்கமடைந்துள்ளனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன், அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றி, அ.தி.மு.க.வினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட மதுசூதனனைத் தவிர தி.மு.க. உள்ளிட்ட 57 பேர் டெபாசிட்டை இழந்துள்ளனர். 19 சுற்றுக்களிலும் தினகரன் முன்னிலையிலேயே இருந்தார். ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியில் தோல்வியடைந்தது எப்படி? என்ற ஆலோசனையில் மூழ்கியுள்ளனர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. டெபாசிட் இழந்தது குறித்து ஆலோசனை நடத்திவருகிறார் மு.க.ஸ்டாலின்.   

தினகரன் வெற்றிக்குக் காரணம் அ.தி.மு.க. ஓட்டுக்கள் மட்டுமல்ல தி.மு.க.வின் ஓட்டுக்களும் அதிகளவில் விழுந்துள்ளன. குறிப்பாக அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பார்கள், தேர்தலுக்கு முன்பு 25 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கட்சித் தலைமை நிர்வாகிகளிடம் வாக்குறுதி கொடுத்துள்ளனர். ஆனால், தேர்தல் முடிவு தலைகீழாக மாறிவிட்டது. ஒவ்வொரு தேர்தல் பொறுப்பாளர்களும் கொடுத்த தேர்தல் கணக்கு, கவனிப்பு குறித்து கட்சித் தலைமை ஆய்வு நடத்திவருகிறது. அதோடு, அ.தி.மு.க.வில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களிடம் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சில முக்கியத் தகவல்களை தேர்தல் பொறுப்பாளர்கள் கட்சித் தலைமையிடம் சொல்லியுள்ளனர். அதில், தேர்தல் பிரசாரத்தில் நடந்த உள்ளடி வேலைகள் குறித்து விரிவாகக் கூறியுள்ளனர். இதைக்கேட்டு கட்சித் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளனர். கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்ற ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஈடுபட்டுள்ளனர். 

 ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், “ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ஆலோசனை நடத்தினர். அப்போது, பூத் வாரியாகப் பெற்ற ஓட்டுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 5 அமைச்சர்கள், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பூத்களில் குறைவான ஓட்டுக்கள் கிடைத்திருப்பது தெரியவந்தது. அதைக்கவனித்த கட்சித் தலைமை நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் அதுதொடர்பாக விசாரிக்க முடிவுசெய்துள்ளனர். இதற்கிடையில், ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை, பன்னீர்செல்வத்தின் மகளிரணியினர் வசைப்பாடியுள்ளனர். அடுத்து, ஓ.பன்னீர்செல்வத்திடம், ‘தர்மயுத்தத்துக்குக் கிடைத்த வெற்றியா? ஆர்.கே.நகர் தோல்வி’ என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர் மகளிரணியினர். ஆனால், அதையெல்லாம் பெரிதுப்படுத்தவில்லை ஓ.பன்னீர்செல்வம். 

கூட்டம் முடிந்தபிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தினகரன் வெற்றி குறித்தும் கட்சியை வழிநடத்துவது குறித்தும் விவாதித்துள்ளனர். அதில் பேசிய கட்சியின் மூத்த அமைச்சரும், நிர்வாகியுமான ஒருவர், 'தினகரனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் சிக்கல் ஏற்படுவதற்கு முன்பு அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட வேண்டும். அதோடு, தினகரனுடன் நெருக்கமாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. அவர்கள் இருவரும் அமைதியாகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறிய கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டி கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் சலசலப்பை ஏற்படுத்தும் என்று ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கருதுகின்றனர். இதனால் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். மதுசூதனனை திட்டமிட்டு தோற்கடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருக்கும் சிலர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரிடையாகவே சொல்லியிருக்கின்றனர். அதுதொடர்பாக ஆதாரத்தை கொண்டு வாருங்கள். அதன்பிறகு ஆலோசிக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குத் தெரியவந்ததும் கொங்கு மண்டல டீம் அமைச்சர்களில் சிலர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு எதிராகக் கொந்தளித்துள்ளனர். அவர்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு சமரசப்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தோல்விக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகளுக்கு இடையே மீண்டும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. மனகசப்புகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் தங்களின் ஆதரவாளர்களுக்கு மெசேஜ் கொடுத்துள்ளனர். அடுத்து நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகளில் ஆர்வம் காட்டிவருகின்றனர் கட்சியினர்” என்றனர். 

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தினகரனை ஆதரித்து தொப்பிச் சின்னத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஓட்டுகேட்டபோது மதுசூதனனையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்தனர். தற்போது, தினகரனை விமர்சித்து மதுசூதனனுக்காக முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ -க்கள் ஓட்டுக்கேட்டனர். அரசியலில் நிரந்தர எதிரி யாரும் கிடையாது என்பது கட்சியினருக்குத் தெரியும். ஆனால், மக்களுக்குத் தெரியாது. தொப்பிச் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், தேர்தல் ரத்து செய்யப்பட்டபோதிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார். தற்போதும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஓட்டுபோட்டு வெற்றி பெற வைத்துவிட்டனர். 75 சதவிகித ஓட்டுக்கள் பதிவாகும் என்று கருதினோம். அதற்கு ஏற்ப தேர்தல் திரைமறை வேலைகள் நடந்தன. ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பணியாற்றிய சில பூத்களில் 50க்கும் குறைவான ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. இதுதான் அ.தி.மு.க.வின் தோல்விக்கு முக்கியக் காரணம். பதிவாகிய ஓட்டுக்களும் அ.தி.மு.கவுக்குக் கிடைக்கவில்லை. அதற்கான காரணத்தை கட்சித் தலைமை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க. வளர்ச்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும்” என்றார். 


டிரெண்டிங் @ விகடன்