வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (27/12/2017)

கடைசி தொடர்பு:15:33 (28/06/2018)

`பிரச்னைகளைத் தீர்த்துவிட்டுதான் மற்றவேலை' - கரூர் மாவட்டத்தைக் கலக்கும் மாற்றுத்திறனாளி

கை, கால்கள் நன்றாக இயங்கும் நம்மில் பலரே 'மக்கள் சேவையா, அது கிலோ என்ன விலை' என்று கேட்டு, சுயநலத்துக்குள் நத்தையாகச் சுருங்குவதுண்டு. ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,சுறுசுறுப்பாக டெங்கு தடுப்புப் பணிகளைச் செய்து வருகிறார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கும் கள்ளப்பள்ளியைச் சேர்ந்தவர் நாகராஜன். மாற்றுத்திறனாளியான இவரின் முழுநேர வேலையே 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று இயங்குவதுதான். கரூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பயணித்து, அங்கு இருக்கும் அடிப்படை பிரச்னைகளைச் சரிசெய்யச் சொல்லி அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் மனு கொடுத்து, பிரச்னைகளைத் தீர்ப்பார். தேவைப்பட்டால் முதல்வரின் தனிப்பிரிவு வரை போய், சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்துவிட்டுதான் மற்றவேலை பார்ப்பார். இவரின் செயல்பாட்டை சமீபத்தில் நமது விகடன் இணையதளம் மூலம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் அறிந்தார். உடனே, நாகராஜனை அழைத்து பாராட்டினார்.

அதோடு, கரூர் மாவட்டத்தை 100 சதவிகிதம் டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால், நாகராஜனை அவர் சார்ந்த கள்ளப்பள்ளி, சிந்தலவாடி மற்றும் லாலாப்பேட்டை ஊராட்சிகளில் நடக்கும் டெங்கு தடுப்புப் பணிகளுக்கு சூப்பர்வைஸராக நியமிக்க, மறுப்பேதும் சொல்லாத நாகராஜன் ஆர்வமாக டெங்கு தடுப்புப் பணிகளை மேற்பார்வையிட ஆரம்பித்துவிட்டார். அந்தந்த பகுதி 100 நாள் வேலைத்திட்டத்தில் இணைந்திருக்கும் பெண்களைக் கொண்டு இவர் தனியார் பள்ளிகளின் குடிநீர் டேங்குகள், கழிவுநீர் வாய்க்கால்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளச் சொல்லி, அதிரடி காட்டி வருகிறார். இதனால், அந்தப் பகுதிகள் சுத்தமாகி வருகின்றன. இந்தப் பணியை அவர் தன்னார்வத்தோடு, சம்பளம் ஏதுமின்றி செய்து வருவதுதான் இதில் ஹைலைட்.