ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் எல்லை மறுவரையரை பட்டியல் வெளியீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறைப் பட்டியலை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில்  ஆட்சியர் எஸ்.நடராஜன் இன்று வெளியிட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி எல்லை மறு வரையறை

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அவற்றின் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்து அதனடிப்படையில் தேர்தல் நடத்தி உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதுமில்லாமல் சாரசரி மக்கள் தொகையைக் கணக்கீடு செய்து அதற்கேற்ப வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்யவும், அவ்வாறு வார்டு எல்லையை மறுவரையறை செய்யும்போது சராசரி மக்கள் தொகை விகிதாச்சாரத்தைப் பொறுத்தமட்டில் கிராம ஊராட்சி வார்டுகளுக்கான எண்ணிக்கையில் 25 சதவிகிதம் அளவுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளைப் பொறுத்தமட்டில் அதன் சராசரி மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் 10 சதவிகித அளவுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கணக்கீடு செய்து ராமநாதபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சியின் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பில் 3075 கிராம ஊராட்சி வார்டுகளும்,170 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும் 17 மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எல்லைகள் சம்பந்தப்பட்ட வார்டு மறுவரையறை அலுவலர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு உத்தேச மறுவரையறைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் விவரம் அனைத்துக் கிராம ஊராட்சிகளின் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் கருத்து மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர்கள் வரும் ஜனவரி 2-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மறுவரையறை ஆணைய சட்ட அறிவுறைகளுக்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில் உரிய அலுவலர்களால் உரியவாறு பரிசீலிக்கப்பட்டு இறுதிப் பட்டியலை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் இந்தப் பட்டியல் வெளியீட்டின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் திட்ட இயக்குநர் தனபதி, பயிற்சி ஆட்சியர் மணிராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சி) செல்லத்துரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்பிரிவு) கணேசன், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!