வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (27/12/2017)

கடைசி தொடர்பு:09:00 (28/12/2017)

“கலெக்டர் சார் சைரன் வச்ச காருல உக்கார வெச்சதும் அழுதுட்டேன்” மாணவி மோனிஷா நெகிழ்ச்சி!

ன் அப்பா ஒரு விவசாயி. விவசாயம் பார்த்துத்தான் என்னையும் என் அக்காவையும் படிக்கவைக்கிறார். எங்க ஊர் பக்கத்துல பொம்பளைப் பிள்ளைகளைப் படிக்கவைக்கவே ரொம்ப யோசிப்பாங்க. என் அப்பா எங்க ரெண்டு பேரையும் நல்லாப் படிக்கவைக்கிறதுல உறுதியா இருந்தாங்க. அங்கே இங்கே கடன் வாங்கி என் அக்காவை பி.எட் வரை படிக்க வெச்சுட்டார். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே, 'ஒரு புள்ளைய படிக்கவெச்சது போதாதா? இந்தப் புள்ளையையும் ஏன் படிக்கவெச்சு கஷ்டத்துக்கு மேலே கஷ்டத்தைச் சேர்த்துக்கிறே?'னு பலரும் அப்பாகிட்டே சொன்னாங்க. ஆனா, நான் பத்தாம் வகுப்புல 491 மார்க் வாங்கியிருந்ததால, எப்படியாவது என்னை மேலே படிக்கவெச்சுடணும்னு அப்பா ஆசைப்பட்டார். அவர் இன்னிக்கு ஊருக்குள்ளே தலை நிமிர்ந்து நடக்குறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்குக் காரணமான கலெக்டருக்கு நான் எப்படி நன்றி சொல்லப்போறேன்னே தெரியலே” பூரிப்பான குரலில் பேசுகிறார், செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சைரன் காரில் அமரவைத்துப் பெருமைப்படுத்தப்பட்டவர். 

ஆட்சித்தலைவரோடு மாணவி மோனிஷா

“பத்தாம் வகுப்பில் அதிக மார்க் வாங்கினதுக்காக சிப்காட் லோட்டஸ் நிறுவனம் மூலமா உதவித்தொகை கொடுக்கிறதா ஸ்கூல்ல சொன்னாங்க. அதுக்காக, அப்பாவையும் அம்மாவையும் அழைச்சுட்டு அங்கே போயிருந்தேன். என்னோடு ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேரும் வந்திருந்தாங்க. எங்க மாவட்ட கலெக்டர், கந்தசாமி சார் அங்கே வந்திருந்தார். 50 ஆயிரம் ரூபா உதவித்தொகை கொடுத்தாங்க. அம்மாவும் அப்பாவும் கூலித் தொழிலாளி. அவங்க பொண்ணு கலெக்டர் கையாலேயே உதவித்தொகை வாங்குறதை நெனைச்சு ரொம்பப் பெருமைப்பட்டாங்க. கலெக்டர் சார் மேடையில் உதவித்தொகையைக் கொடுத்ததும், 'சார், நான் பக்கத்துல இருக்குற மோரணம் கிராமத்திலிருந்து வரேன். எனக்கு ஃபியூச்சர்ல உங்களை மாதிரி கலெக்டர் ஆகணும்னு ஆசை'னு சொன்னேன். உடனே அவர், நிகழ்ச்சி முடிஞ்சதும் கொஞ்சம் வெயிட் பண்ணும்மா'னு சொன்னாங்க. 

மோனிஷா தலைமையாசிரியையோடு

மேடையை விட்டு கீழே வந்ததும் அம்மா, அப்பாகிட்டே விஷயத்தைச் சொன்னேன். எதுக்காக வெயிட் பண்ணச் சொல்றார்னு குழப்பமா இருந்துச்சு. நிகழ்ச்சி முடிந்ததும், என்னைக் கூப்பிட்ட கலெக்டர் சார், 'என்னோடு வா'னு தோளில் கை போட்டு வாசலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே இருந்த யாருக்குமே என்ன நடக்குதுனு தெரியலை. எனக்கும் தலையே சுத்துற மாதிரி இருந்துச்சு. வாசலுக்குக் கூட்டிட்டுப் போனதும், அவரோட சைரன் வச்ச காரின் கதவை அவரே திறந்து என்னை உட்காரச் சொன்னாங்க. 'இதோ, இதுக்காகதானே ஆசைப்பட்டே. இப்பவே நீ கலெக்டர் ஆகிட்டே'னு சொன்னதும், அழுதுட்டேன். 'இன்னைக்கு நீ அழற மாதிரி ஃபியூச்சர்ல நீ நிஜமாவே கலெக்டர் ஆனதும், உன் அப்பா, அம்மா சந்தோஷத்துல கண்ணீர் விடணும் சரியா'னு சொன்னாங்க. விஷயம் கேள்விப்பட்டதும் எங்க கிராமத்துல எல்லாரும் அப்பாகிட்ட வந்து ரொம்ப பெருமையாப் பேசினாங்க. கலெக்டர் சாருடன் எடுத்துக்கிட்ட போட்டோவை பெருசா பிரேம் பண்ணி வீட்டுல மாட்டிவெச்சுப்பேன். நான் கலெக்டர் ஆனதும் அதை சார்கிட்ட காட்டி சந்தோஷப்படணும்” மனதிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள், மோனிஷாவின் எதிர்காலக் கனவுகளைத் தீர்மானிக்கும் வல்லமை படைத்தவை. 

''மோனிஷா பின்தங்கிய குடும்பத்திலிருந்து படிக்க வந்தவள். ஆரம்பத்திலிருந்து எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவி. கலெக்டர் அவளை இப்படி ஊக்கப்படுத்தினது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இனி, நாங்களும் மற்ற மாணவர்களை இன்னும் நிறைய ஊக்கப்படுத்துவோம். கலெக்டரின் இந்தச் செயல் மற்ற மாணவர்களுக்கும் ஒரு எனர்ஜியைக் கொடுத்திருக்கு” என்கிறார் மோனிஷாவின் தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி. 


டிரெண்டிங் @ விகடன்