மத்திய அமைச்சர் அனந்தகுமாரை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும்..! மு.க.ஸ்டாலின் | PM Modi should dismiss Union Minister Ananth Kumar hegde from his ministry, says M.K.Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 23:41 (27/12/2017)

கடைசி தொடர்பு:08:07 (28/12/2017)

மத்திய அமைச்சர் அனந்தகுமாரை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும்..! மு.க.ஸ்டாலின்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெட்ஜை, அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெட்ஜ், நேற்று பேசும்போது, 'யாரேனும் தன்னை, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்று அடையாளப்படுத்துவதை நான் வரவேற்கிறேன். அதற்கு மகிழ்ச்சியடைகிறேன். அவர், தங்களுடைய பரம்பரையைப் பற்றி அறிந்துவைத்துள்ளார்கள். ஆனால், மதமில்லை என்று கூறுபவர்களை எப்படி அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. தனது, தந்தையைப் பற்றி தெரியாதவர்கள்தான் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறுகின்றனர்' என்று தெரிவித்தார்.

அவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இதைக் கண்டித்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், 'மதச்சார்பின்மைக்கு எதிரான மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெட்ஜின் அவதூறு பேச்சு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாகும். அவருடைய பேச்சுக்காக, பிரதமர் மோடி அவரது அமைச்சரவையிலிருந்து அனந்தகுமார் ஹெட்ஜை நீக்கவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.