25 ஆண்டுகளாக அனுபவித்த சொத்து பறிபோனதால் ஆத்திரம்! பெரியப்பாவை கொடூரமாகக் கொன்ற தம்பி மகன்

25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வந்த சொத்தை பெரியப்பா கேட்டதால் ஆத்திரம் அடைந்த தம்பி மகன் அவரை இரும்புக்கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாமிர்தம். இவருக்கு இரண்டு மகள்கள். இவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. ராமாமிர்தம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக அவரது சொந்த கிராமமான பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு வந்துள்ளார். இவருடைய நிலம் மற்றும் மனைகளை இவரின் தம்பி இளைபெருமாள் மகன் சரவணன் ஆண்டு அனுபவித்து வந்துள்ளார். அவரிடம், நான் இனி எனது சொத்துகளை விவசாயம் செய்துகொள்கிறேன் எனக் கேட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார். மேலும், சரவணனின் தந்தை இறந்துபோனபோது ராமாமிர்தம் துக்ககாரியத்துக்குச் செல்லாமல் ஒதுக்கியிருக்கிறார். இந்த இரு சம்பவங்களால் சரவணனுக்கும் ராமாமிர்தத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துவந்தது.

இந்நிலையில், இன்று பெரியகிருஷ்ணாபுரம் கோயில் அருகேயுள்ள ஆலமரத்தின் கீழ் கட்டப்பட்ட சிமென்ட் கட்டையில் ராமாமிர்தம் உட்கார்ந்து பேப்பர் படித்துகொண்டிருந்தார். இதைக்கண்ட சரவணன் ராமாமிர்தத்திடம் குடும்ப பிரச்னை மற்றும் சொத்துகுறித்து பேசிக்கொண்டிருந்தார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் சரவணன், தான் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் தலையின் பின்பக்கம் தாக்கியதில் மண்டை உடைந்து ராமாமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்குச் சென்று பிரேதத்தைக் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சரவணனைக் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!