வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (28/12/2017)

கடைசி தொடர்பு:13:05 (28/12/2017)

உலக யோகா போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கும் மாணவன்! எனது கனவு நிறைவேறுமா என ஏக்கம்

யோகா

யோகா செய்வதில் தேசிய அளவிளான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் ஒருவர் மலேசியா நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டியில் பணமில்லாத சூழலால் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார்.

திருச்சி மாவட்டம், லால்குடி தெற்குதெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சரவணன், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். யோகா போட்டிகளில் பங்கேற்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றிபெற்றுள்ள சரவணனுக்கு உலக அளவில் மலேசியா நாட்டில் நடைபெறும் யோகா போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவரின் வறுமை அந்தப் போட்டிகளில் பங்குகொள்ள முடியுமா என்பதைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. தனது நிலை குறித்து திருச்சி கலெக்டர் ராசாமணியிடம் மனு அளித்து உதவி செய்திட கோரிக்கை வைத்துள்ளார்.

நம்மிடம் பேசிய மாணவர் சரவணன், “எங்கப்பா கூலி வேலை செய்கிறார். அவரின் வருமானம் எங்களை வளர்க்கவே சரியாக இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் எங்க விளையாட்டு சார் பிள்ளைகளுக்கு யோகா கற்றுக்கொடுத்தார். அதைப் பார்த்து ஆர்வமான நான், நண்பர்களுடன் சேர்ந்து யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அடுத்து ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், தாலுகா மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டேன். அதில் அடுத்தடுத்து வெற்றிபெற்றதால், எனக்குத் தேசிய அளவிளான போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் பரிசுகள் வென்றேன். அதன் தொடர்ச்சியாக வரும் மே மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள உலக அளவிலான யோகாபோட்டியில் கலந்துகொள்ள தேர்ச்சி பெற்றுள்ளேன்.

அந்தப் போட்டில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்றால் ரூபாய் 75 ஆயிரம் செலவு என்று கூறுகிறார்கள். அந்தளவுக்கு எங்கள் வீட்டில் வசதிகள் இல்லை. அம்மா அப்பா இருவரும் தினமும் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். ஆனாலும் அவர்களால் இவ்வளவு பணம் கட்ட முடியாது எனக் கூறிவிட்டார்கள். அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முதல் தவணையாக ரூ.35 ஆயிரமும், அடுத்து 2-வது தவணையாக மலேசியா செல்லும்போது கட்ட வேண்டும். இதுமட்டுமல்லாமல் போட்டியில் கலந்துகொள்ளும்போது கைச்செலவுக்கு 10 ஆயிரம் தேவையாம். இவ்வளவு பணத்தையும் நாங்கள் பார்த்ததுகூட இல்லை. இந்நிலையில்தான், நான் மலேசியாவில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள உதவிகள் செய்யும்படி மாவட்ட கலெக்டரிடம் மனுக் கொடுத்தேன். மனுவை வாங்கிக்கொண்ட கொண்ட கலெக்டர், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். என் கனவு நிறைவேறுமா? எனக் கலங்கினார்.