வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (28/12/2017)

கடைசி தொடர்பு:14:58 (28/12/2017)

அ.தி.மு.க-வில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் 100 பேருக்கு கல்தா!

தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர் முதல்வரும் துணை முதல்வரும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன், ஆளும் அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் அதிரவைத்தார். பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி பெற்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே, தினகரனுக்கு சில அமைச்சர்களும், பல எம்.எல்.ஏ-க்களும் வாழ்த்து தெரிவித்ததாகவும் செய்திகள் பரவியது. இடைத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் அதிர்ச்சியில் இருக்கும் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தினகரன் ஆதரவாளர்களை களைஎடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட புரட்சித் தலைவர் அம்மா பேரவைச் செயலாளர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, தருமபுரி மாவட்ட புரட்சித் தலைவர் அம்மா பேரவைச் செயலாளர் சி.தென்னரசு, திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், திருச்சி புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் சமயபுரம் சி.ராமு,

பெரம்பலூர்  மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் மா.சேகர், மதுரை மாநகர்  மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, தேனி  மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் ஸ்டார் எம்.ரபீக், வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் பாலசுப்பிரமணி, புதுக்கோட்டை மாவட்ட அவைத் தலைவர் ரத்தினசபாபதி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரை கட்சியில் இருந்து இருவரும் நீக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே தினகரன் ஆதரவாளர்கள் 5 பேர் கட்சியைவிட்டும் 4 பேர் அவரவர் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரும், துணை முதல்வரும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.