அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம், அண்ணனுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி அனிதாவுக்கு, நீட் தேர்வால் எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு பறிபோனது. இந்த விரக்தியில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா, தற்கொலை செய்துகொண்டது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழகம் தழுவிய அளவில், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை தடை செய்யக் கோரியும் பல போராட்டங்கள் வெடித்தன. அப்போது, தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட நிதியுதவியான 7 லட்சம் ரூபாயை அனிதாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், இன்று அனிதாவின் குடும்பத்திடம் நிதியுதவியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும், அனிதாவின் அண்ணன், சதிஷ்குமாருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்கினார் முதல்வர்.

நிதியுதவி பெறும் அனிதாவின் குடும்பத்தினர்

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், `அனிதாவின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்கப்படும் என்றும் 1-9-2017 அன்று தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், 7 லட்ச ரூபாய்க்கான காசோலையை இன்று அவரது தந்தை சண்முகத்திடம் வழங்கினார் முதல்வர். மேலும், அனிதாவின் அண்ணன் சதீஷ்குமாருக்கு, சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் இளநிலை உதவியாளராக பணியமர்த்தம் செய்து அதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!