வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (28/12/2017)

கடைசி தொடர்பு:15:25 (28/12/2017)

ட்விட்டரை அதிரவிட்ட #jallikattu ஹேஷ்டேக்!

நடப்பு 2017-ம் ஆண்டில் இந்தியாவில் சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்த ஹேஷ் டேக்குகள் வரிசையில் #jallikattu ஹேஷ் டேக்கும் இடம் பிடித்துள்ளது. 


இந்தப் பட்டியலில் பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான `மன் கி பாத்' நிகழ்ச்சியைக் குறிக்கும் #MannKiBaat முதலிடத்தில் இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி மனதில் உள்ளதைப் பேசுகிறேன் என்ற தலைப்பில் ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார். அந்த உரை குறித்து பல்வேறு துறை பிரபலங்களும் பொதுமக்களும் அந்த ஹேஷ்டேக் மூலம் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல், தமிழர்களின் பாரம்பர்யமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கில் இளைய சமுதாயத்தினர் திரண்டு கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்துக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். சமூக வலைதளங்கள் மூலமாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்தவகையில், 2017-ம் ஆண்டில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ்டேக்குகள் வரிசையில் #jallikattu ஹேஷ் டேக்கும் இடம்பிடித்துள்ளது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவைக் குறிக்கும் #GST, மும்பை மாநகரில் பெய்த மழை குறித்த #MumbaiRains, முத்தலாக் குறித்த #TripleTalaq, தூய்மை இந்தியா குறித்த  #SwachhBharat, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்த #UttarPradesh, குஜராத் தேர்தல் குறித்த #GujaratElections மற்றும் ஆதாரைக் குறிக்கும் #Aadhaar போன்ற ஹேஷ்டேக்குகளும் 2017-ம் ஆண்டில் டாப் ட்ரெண்டில் இருந்த ஹேஷ் டேக்குகள் என்று ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.