வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (28/12/2017)

கடைசி தொடர்பு:15:45 (28/12/2017)

ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தை அமாவாசைத் திருவிழா ஜனவரி 7-ம் தேதி தொடக்கம்!

பிரசித்திபெற்ற ஏரல், சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசைப் பெருந்திருவிழா வரும் ஜனவரி 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருக்கோயில்களில் ஏரல் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் தை மற்றும் ஆடி மாத அமாவாசைத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தை அமாவாசைத் திருவிழா, வரும் ஜனவரி 7-ம் தேதி ஞாயிறு அன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாள்கள் இத்திருவிழா நடைபெறும். 

இத்திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி சேர்மன் அருணாச்சரர் பல்வேறு சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இத்திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான 10-ம் நாள் திருவிழாவான வரும் ஜனவரி 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை, 'தை அமாவாசை' அன்று மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிசேகமும் உருகுபலகையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு விலாமிச்சை வேர் சப்பரத்தில் 'சேர்மத் திருக்கோலக் காட்சி' அளிக்கும் வைபம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடைபெறுகிறது. 

11-ம் நாள் திருவிழாவான 17-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகமும் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடைபெறுகிறது. மாலையில் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி நிகழ்ச்சிக்குப் பின், இரவு சுவாமி சேர்மன், மூலஸ்தானம் சென்று சேரும் ஆனந்தக்காட்சி நடைபெறுகிறது.

12-ம் நாள் திருவிழாவான 18-ம் தேதி வியாழக்கிழமை, தாமிரபரணி நதியில் சகல நோய்தீர்க்கும் திருத்துறையில் நீராட்டு, மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம் மங்கள சேவை தரிசனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு ஏற்பாடு செய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லையிலிருந்து ஏரலுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க