வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (28/12/2017)

கடைசி தொடர்பு:15:41 (28/12/2017)

''வயிறு நிறைஞ்சாலே தப்புப் பண்ண மனசு வராது!'' - மதுரையில் இலவச சாப்பாடு அளிக்கும் காந்திமதி

''இவருக்கும் ஒரு இலையப் போடுங்க'' என்று முகம் தெரியாத நபருக்கு அன்போடு சோறு போடும் கரிசனத்துக்கு இணையாக உலகில் வேறு என்ன இருக்க முடியும்? அப்படி ஒரு பெரும் சேவையைச் செய்துகொண்டிருக்கிறார் காந்திமதி அம்மாள். 

காந்திமதி

மதுரை, கீழவெளி வீதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு காலை 9 மணிக்கே தார்பாய் பந்தலில் ஒரு கூட்டம் காத்திருக்கிறது. அவர்களுக்கு மத்தியில் வந்துநிற்கிறார் அந்தப் பெண்மணி. வள்ளலாரை வணங்கி அவரின் நாமத்தை உச்சரித்துவிட்டு, அனைவருக்கும் சாப்பாடு வழங்குகிறார். எல்லோரின் முகங்களிலும் தோன்றும் நிறைவைப் பார்த்துவிட்டு திருப்தியுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார். 

காந்திமதி

“எனக்கு வயசு 68 ஆகுதுப்பா. எனக்கு ரெண்டு ஆண், ரெண்டு பெண் புள்ளைங்க. எல்லாருக்கும் கல்யாணம் ஆகிருச்சு. என் புருஷன் டெய்லரா வேலை செஞ்சவர். இப்போ எனக்கு சின்னச் சின்ன உதவிகள் செய்துகொடுக்கிறார். 15 வருஷத்துக்கு முன்னாடி, சிவா அன்பானந்தம் என்பவர் இங்கே இந்த மாதிரி சேவை செய்யறதைப் பார்த்தேன். அவருக்கு உதவியா நாமும் ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். காய்கறி நறுக்கிக் கொடுக்கிறது, சமையலில் உதவியா இருக்கிறதுனு செஞ்சேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி அந்த ஐயா இறந்துட்டார். அவருக்குப் பின்னாடி யார் எடுத்துச் செய்யறதுனு கேள்வி வந்தப்போ, முழுப் பொறுப்பையும் நான் ஏத்துக்கிட்டேன். எனக்குச் செல்லூரில் வீடு. அங்கே இருந்துதான் சமைச்சுக் கொண்டுவரேன். எங்களுக்குப் பெரிய லட்சியம் எதுவுமில்லீங்க. உடம்பில் கடைசித் துளி தெம்பு இருக்கிற வரைக்கும் நாலு பேரின் பசியைப் போக்கணும் அவ்வளவுதான்'' என்கிறார் மெல்லிய புன்முறுவலுடன். 

விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டில் சமைக்க ஆரம்பித்துவிடுகிறார் காந்திமதி அம்மாள். சரியாக 9 மணிக்கு இங்கே வந்து விளக்கு தீபம் ஏற்றி, வள்ளலார் வழிபாடு நடக்கிறது. பிறகு, சாப்பாடு பரிமாறப்படுகிறது. 

 

சாப்பாடு பரிமாறும் காந்திமதி

 

''முன்னாடி கொட்டகை போட்டு மதியத்தில் சாப்பாடு கொடுத்துட்டிருந்தோம். ஆனா, போலீஸ் கட்டுப்பாடு விதிச்சு கொட்டகையை எடுத்துட்டாங்க. வெட்டவெளி வெயிலில் எப்படிச் சாப்பிடறது? அதனால், காலையிலையே கொடுக்கிறோம். வெயில் இல்லைன்னாலும் மழை, தூசி தொந்தரவு இருக்கும். போலீஸ் அதிகாரிகள்கிட்ட கெஞ்சி, இந்தத் தார்பாய் போட அனுமதி வாங்கினேன். சாம்பார், கூட்டு, மோர், ஊறுகாய் எனக் கொடுப்போம். யாராவது அவங்க பிறந்தநாள், கல்யாண நாளில் பணம் கொடுப்பாங்க. அப்போ, வடை, ஜிலேபி சேர்த்துக்கொடுப்போம். இந்த அறப்பணியைச் செய்ய தூண்டுகோலாக இருக்கிறது, மணிகண்டன் என்ற நல்ல மனிதர்தான். அவர் பத்திரிகை துறையில் இருக்கார். அவர்தான் எனக்குத் தைரியம் கொடுத்து உதவி செய்யறார். இவரை மாதிரி பல நல்ல உள்ளங்கள் உதவி செய்றாங்க. எங்களைப் பற்றி தெரிஞ்சு காய்கறி கடை, இலை கடை, அரிசிக் கடை எனப் பலரும் தங்களால் முடிஞ்சதை மனசாரக் கொடுக்கிறாங்க. அதையெல்லாம் வெச்சுதான் இதைச் செஞ்சுட்டிருக்கேன். ஒரு சில நாளில் கடன் வாங்கியும் செய்யறதுண்டு. நான் செய்யறேன்னு சொல்றதே தப்பு. இறைவன் செய்யவைக்கிறார். அவருக்கு நான் ஒரு கருவியா இருக்கேன். இந்த வயசுக்கே உண்டான மூட்டுவலி, பிரஸர் எல்லாம் எனக்கும் இருக்கு. ஆனா, இந்தச் சாப்பாட்டை எதிர்பார்த்து பசியோடு பல வயிறுகள் காத்திருக்குமே. அதனால், என்ன நோவு இருந்தாலும், சூரியன் உதிக்க மறந்தாலும் சாப்பாட்டோடு வந்துடுவோம். தீபாவளி, பொங்கலுக்குகூட இங்கே விடுமுறை இல்லை'' என்கிறார் காந்திமதி அம்மாள். 

 

காந்திமதி அம்மாள் கடையில்

இங்கே சாப்பிடும் பலரும் முதியவர்கள், மனநலம் குன்றியவர்கள். ''ஒரு நாளைக்கு 75 பேருக்குனு கணக்குப் போட்டு சாப்பாடு செஞ்சுட்டு வருவோம். சில சமயம் அதுக்கு மேலேயே வந்துடுவாங்க. முடிஞ்ச வரைக்கும் யாருக்கும் சோறு இல்லைனு சொல்லாமல் கொடுக்கப் பார்ப்போம். இங்கே சாப்பிட சில கண்டிசன்ஸ் இருக்கு. ஒழுக்கத்தோடும் அமைதியோடும் சாப்பிடணும். சாப்பாட்டை வீணாக்கக் கூடாது. சில மனநோயாளிகள் திட்டிட்டுப் போவாங்க. அதைப் பெருசா எடுத்துக்காமல் விட்டுடுவோம். பாவம், அவங்க புரியாமல்தானே செய்யறாங்க. தீபாவளிக்குச் சிலர் கொடுக்கும் உதவியை வெச்சு வேஷ்டி, சேலை, துண்டு, ஸ்வீட் கொடுப்போம். அந்த நாள் இன்னும் சந்தோஷமா இருக்கும். பலருக்கும் அதுதான் அந்த வருஷம் முழுசுக்குமான ஒரே துணியா இருக்கும். மொத்தத்துல வயிறு நிறைஞ்சாலே தப்புப் பண்ண மனசு வராதுய்யா'' என்கிற காந்திமதி அம்மாள் முகத்தில் அவ்வளவு நிறைவு. 


டிரெண்டிங் @ விகடன்