`என்ன செய்தால் நடவடிக்கை எடுப்பீர்கள்' - கலெக்டர் காலில் விழுந்து கும்பிட்ட விவசாயிகள்

திருச்சி கலெக்டர் காலில் விழுந்து விவசாயிகள் கும்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

விவசாயிகள்

திருச்சி மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், கலெக்டர் கு.ராசாமணி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும், விளைபொருள்களுடன் வந்த விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் தரைவியில் விழுந்து கும்பிட்டனர்.

அப்போது விவசாயிகள், “தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இன்ஷூரன்ஸ் பணம் 70 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இதுவரையிலும் வழங்கப்படவில்லை. மேலும், கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் 12 சதவிகிதம் வட்டியை அறிவித்துள்ள நிலையில் வட்டியில்லா கடன் வழங்கிடவும், அத்துடன் அபராத வட்டி என 3 சதவிகிதம் கூடுதல் வசூலித்துவரும் சொசைட்டிகளின் மீது நடவடிக்கை எடுக்கவும், மும்முனை மின்சாரம் வழங்காமல் காலம் தாழ்த்திவரும் நிர்வாகத்தைக் கண்டித்தும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஆட்சியர் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் காலில் விழுந்து மன்றாடுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுவரை தொடர்ந்து குறைதீர் கூட்டத்தைப் புறக்கணிப்பு செய்து வெளிநடப்பில் ஈடுபட்டு, கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசைக் கண்டித்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், அரசு விவசாயிகளை அடிமைகளாகப் பார்ப்பதால்தான் விழுந்து கும்பிட்டு கோரிக்கை வைத்துள்ளோம். என்ன செய்தால் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரியவில்லை எனக் குற்றம்சாட்டிய விவசாயிகள், இனி தற்கொலைதான் தீர்வா என்றும் தெரியவில்லை. விவசாயிகளை நிர்மூலமாக்கிவிட்ட போதிலும், 10 நாள்களுக்குள் நிறைவேற்றவில்லை என்றால் ஆண்கள், பெண்கள் என அனைத்து விவசாயிகளும் ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தப் போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!