மௌன விரதத்தில் சசிகலா... ஆசி பெற்ற தினகரன்... சிறை சந்திப்பில் என்ன நடந்தது?

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, டி.டி.வி.தினகரன், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

தினகரன்

அப்போது, `ஜெயலலிதா  நினைவுநாளிலிருந்து சசிகலா மௌன விரதம் இருந்துவருகிறார். ஜனவரி இறுதிவரை அவர் மௌன விரதத்தில்தான் இருப்பார் என்று தெரிகிறது. ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி குறித்து சசிகலாவிடம் கூறி ஆசி பெற்றேன். எனது எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவரிடம் எடுத்துக் கூறினேன். அவர் அனைத்தையும் கேட்டுக்கொண்டு ஆமோதித்துத் தலையசைத்தார்' என்றவரிடம், தன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, `இவர்களுக்கு பதவியிலிருந்து பிரதிநிதிகளை நீக்க என்ன அதிகாரம் இருக்கிறது. அவர்களை அ.தி.மு.க-வின் தொண்டர்கள் புறக்கணித்து வெகு நாள்கள் ஆகிகின்றன. கட்சியிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது. அது புரியாமல் பதவியும் ஆட்சியும் கையில் இருப்பதால், நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்' என்று நக்கலாகக் கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, `ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்தத் தவறும் நடக்கவில்லை. ஆனால், அது குறித்து தவறான பிரசாரத்தை ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள். சசிகலாவிடம் வீடியோ நகலை வாங்கி வெற்றிவேலிடம் கொடுத்தேன். ஆனால், வெற்றிவேல் எங்களையும் மீறி வீடியோவை வெளியிட்டார்' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!